சென்னையில் இன்னும் சில மணி நேரங்களுக்கு மழை தொடரும் என தனியார் வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
வடதமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. நேற்று தென்மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி அதே இடத்தில் நீடிப்பதாகவும் கூறப்பட்டிருந்தது. அத்துடன் சுமார் 2 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் நிலைகொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியால் உருவான மேகக்கூட்டங்கள் தரைப்பகுதியை நோக்கி நகரும்போது காற்றின் வேகம் மற்றும் திசை மாற்றம் காரணமாக கடலிலேயே மழையாக பொழிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. சென்னையை பொறுத்த வரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒரிருமுறை மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.
இந்நிலையில் சென்னையில் வடபழனி, ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, நுங்கம்பாக்கம், கோடப்பாக்கம், எழும்பூர், அம்பத்தூர், ராயபுரம், போரூர், வளசரவாக்கம், ஆவடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. அத்துடன் கும்மிடிப்பூண்டி, புழல், செங்குன்றம், குன்றத்தூர், தாம்பரம் உள்ளிட்ட இடங்களிலும் கனமழை பெய்து வருகிறது.
இந்த சூழலில், கனமழை மேலும் சில மணிநேரங்களுக்கு தொடரும் என தனியார் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே சென்னையில் வளசரவாக்கம் உள்ளிட்ட சில இடங்களில் கனமழை காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.