சென்னையில் ‘இரும்புத்திரை’ பட பாணியில் ஒருவரின் வங்கிக்கணக்கில் இருந்து பணம் திருடப்பட்டுள்ளது.
சென்னை குரோம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கட்டுமான தொழிலதிபர் ரீனா (35). இவர் குரோம்பேட்டை ராஜேந்திர பிரசாத் சாலையில் உள்ள எச்டிஎப்சி வங்கியில் கடந்த 7 வருடங்களாக சேமிப்பு கணக்கு வைத்துள்ளார். இந்நிலையில் நேற்று மதியம் அவருடைய செல்போனுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் சேமிப்பு கணக்கில் இருந்து ரூ.57,000 பணம் எடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து வங்கியில் சென்று கேட்டபோது, உதவி மேலாளர் அலட்சியமாக பதிலளித்ததாக ரீனா குற்றம்சாட்டுகின்றார். அத்துடன் “உங்களால் என்ன செய்ய முடியுமோ செய்து கொள்ளுங்கள். எங்களுக்கு ஒன்றும் தெரியாது” என அவர் கூறியதாகவும், ரீனா தெரிவித்துள்ளார். இரண்டு நாட்களாக அழைக்கழிப்பதோடு, பணம் எங்கே சென்றது என்று பதிலளிக்கவில்லை என்றும் அவர் குறை கூறியுள்ளார். இரும்புத்திரை திரைப்பட பாணியில், வங்கிக்கணக்கின் உரிமையாளருக்கே தெரியாமல் அவரது பணம் ரூ.57,000 திருடப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி வங்கி வாடிக்கையாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே தனது பணம் கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பாக உரிய பதில் அளிக்காத வங்கியை கண்டித்து ரீனா தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.