முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீதான வழக்கு: துணை நடிகைக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீதான வழக்கு: துணை நடிகைக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்
முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீதான வழக்கு: துணை நடிகைக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்
Published on

அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிராக அளித்த புகாரை திரும்பப் பெற்றுக்கொண்டதாக துணை நடிகை தெரிவித்ததையடுத்து, அமைச்சருக்கு எதிரான வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்தவர் மணிகண்டன். இவர் தன்னை திருமணம் செய்துகொள்வதாகச் சொல்லி ஏமாற்றியதாக திரைப்பட துணை நடிகை சாந்தினி அளித்த புகாரின்பேரில், முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிராக அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மணிகண்டனுக்கு சென்னை உயர் நீதிமன்றம், நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது சைதாப்பேட்டை 11வது நீதிமன்றத்தில் அடையாறு மகளிர் போலீசார் 351 பக்க குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்திருந்தனர். வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, நடிகை சாந்தினி சார்பில் இந்த புகாரை திரும்ப பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, தன் பெயருக்கு களங்கம் விளைவித்ததாக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சார்பில் புகார் அளித்தால் என்னவாகும் என்று கண்டனம் தெரிவித்த நீதிபதி, முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com