கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில், பள்ளி கட்டடம் புலன் விசாரணைக்கு தேவைப்படுகிறதா என விளக்கமளிக்க சிபிசிஐடி-க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணத்தை கண்டித்து கடந்த ஜூலை 17ம் தேதி நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் பள்ளியில் உள்ள பொருட்கள் சேதப்படுத்தப்பட்டன. இதையடுத்து, பள்ளி மூடப்பட்டது. தற்போது பள்ளி வளாகம் முழுவதும் சீரமைக்கப்பட்டு விட்டதால், பள்ளியை மீண்டும் திறக்க அனுமதிக்கும்படி உத்தரவிடக் கோரி பள்ளியை நிர்வகிக்கும் லதா கல்வி அறக்கட்டளை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் பள்ளியை மீண்டும் திறப்பதற்கு அனுமதிக்கலாமா? என்பது குறித்து தெரிவிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி சுரேஷ்குமார் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அரசுத்தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், நீதிமன்ற உத்தரவின்படி செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டது. தமிழக தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, மாணவி மரணம் குறித்த புலன் விசாரணை இன்னும் முழுமையாக முடிவடையவில்லை என்பதால் சம்பந்தப்பட்ட ஏ பிளாக் கட்டடம் விசாரணைக்கு தேவைப்படலாம் எனத் தெரிவித்தார்.
அதற்கு பள்ளி நிர்வாகம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் முழு வளாகமும் சீரமைக்கப்பட்டு விட்டதாக தெரிவித்தார். மகளிர் ஆணையம் விசாரித்து அளித்த அறிக்கையில், புலன் விசாரணையில் குறைபாடுகள் இருப்பதால், முழுமையாக விசாரணை முடியும் வரை பள்ளியை திறக்க அனுமதிக்க கூடாது என மாணவியின் தந்தை தரப்பு வழக்கறிஞர் சங்கர சுப்பு தெரிவித்தார்.
இதையடுத்து, சிபிசிஐடி-யை தாமாக முன்வந்து எதிர் மனுதாரராக சேர்த்த நீதிபதி சுரேஷ்குமார், குறிப்பிட்ட அந்த கட்டடம் புலன் விசாரணைக்கு தேவைப்படுகிறதா என்பது குறித்தும், புலன் விசாரணை எப்போது முடித்து, குற்றப்பத்திரிகை எப்போது தாக்கல் செய்யப்படும் என அறிக்கை அளிக்கும்படியும் உத்தரவிட்டு, விசாரணையை நவம்பர் 30ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.