செய்தியாளர்: சுகன்யா
நேற்று மதியம் 2.30 மணியளவில் ஆந்திராவின் சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளி என்ற ஊரைச் சேர்ந்த 44 வயதான வீராச்சாமி என்பவரை, குடிபோதையில் அவரது நெருங்கிய உறவினர் ஒருவர் கத்தியால் குத்தியுள்ளார். அவரை மீட்ட அப்பகுதியினர், சித்தூரை சுற்றியுள்ள பல அரசு மருத்துவமனைகளை அணுகியுள்ளனர்.
ஆனால் எங்கும் சிகிச்சை பலனில்லாத நிலையில் குத்தப்பட்ட கத்தியுடனேயே 14 மணி நேர போராட்டத்திற்கு பிறகு சென்னை அரசு ராஜிவ் காந்தி மருத்துவமனையில் இன்று காலை 6 மணிக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார் வீராச்சாமி.
உடனடியாக பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு 8 மணிக்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சை அரங்கில், 3 மணி நேரம் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், தற்போது அவரின் உடல்நிலை சீராக உள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தின்போது 28 செ.மீ நீளம் கொண்ட கத்தி, சுமார் 10 செ.மீ நீளத்திற்கு பின் கழுத்தின் கீழிருந்து நடுப்பகுதியில் இறங்கி இருந்தது. இதனால் வீராச்சாமியை படுக்க வைத்து மயக்க மருந்து கொடுப்பதில் சவால் இருந்துள்ளது. இதை திறமையாக கையாண்டுள்ளனர் மயக்கவியல் மருத்துவர்கள் ஷண்முகப் பிரியா மற்றும் ரவி. தொடர்ந்து இதய மற்றும் நுரையீரல் அறுவை சிகிச்சைப் பிரிவு துறைத் தலைவர் மாரியப்பன் வழிகாட்டுதலில் பேராசிரியர் சிவன் ராஜ், உதவிப் பேராசிரியர் ஜெயப் பிரகாஷ் ஆகிய இருவரும் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளனர்.
14 மணி நேரம் கத்தியுடன் தவித்த நபரின் உயிர் காத்துள்ள சென்னை அரசு ராஜிவ் காந்தி மருத்துவமனைக்கு தெலுங்கு மட்டுமே தெரிந்த வீராசாமியின் குடும்பம் கண்ணீரால் நன்றி சொல்லி இருக்கிறது.