சென்னையை சேர்ந்த மாணவி மூளை அறுவை சிகிச்சையின்போது தைரியமாக கேன்டி கிரஷ் விளையாட்டை விளையாடிய சம்பவம் மருத்துவர்களை வியப்படைய செய்துள்ளது.
சென்னையில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையில் 5ஆம் வகுப்பு படிக்கும் பெண் குழந்தை உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஸ்கேன் செய்தபோது மூளையில் கட்டி இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. எனினும் இந்த சிகிச்சையின் போது நோயாளி விழித்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
நோயாளி விழித்திருந்தாலும் அவருக்கு வலி ஏற்படாது என்று பெற்றோருக்கு மருத்துவர்கள் உறுதி அளித்தனர். இதற்கு முதலில் மறுப்பு தெரிவித்த பெற்றோர் பிறகு சம்மதம் தெரிவித்தனர். அறுவை சிகிச்சையின்போது அச்சிறுமி எந்தவித அச்சமும் இன்றி செல்ஃபோனில் கேன்டி கிரஷ் கேம் விளையாடி கொண்டிருந்தார். வயதில் பெரியவர்கள் கூட பயந்து நடுங்கும் இச்சிகிச்சைக்கு சிறுமி தங்களுக்கு தைரியமாக முழு ஒத்துழைப்பு அளித்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.