சென்னை: சினிமா பாணியில் கொள்ளையனை துரத்திப்பிடித்த உதவி ஆய்வாளர் - குவியும் பாராட்டு!

சென்னை: சினிமா பாணியில் கொள்ளையனை துரத்திப்பிடித்த உதவி ஆய்வாளர் - குவியும் பாராட்டு!
சென்னை: சினிமா பாணியில் கொள்ளையனை துரத்திப்பிடித்த உதவி ஆய்வாளர் - குவியும் பாராட்டு!
Published on

இரவு நேர முழு ஊரடங்கின் போது நகை பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையனை ஆயிரம் விளக்கு உதவி ஆய்வாளர் 1 கிலோ மீட்டர் தூரம் துரத்தி சென்று பிடித்தார்.

சென்னை நுங்கம்பாக்கம் பைகிராப்ட் கார்டன் சாலையை சேர்ந்த 2 சிறுவர்கள் கடந்த 22ஆம் தேதி தொழுகைக்காக சைக்கிளில் ஜோசியர் தெருவிற்கு சென்றனர். பின்னர், தொழுகையை முடித்துவிட்டு சிறுவர்கள் இருவரும் உத்தமர் சாலை வழியாக வரும்போது நம்பர் பிளேட் இல்லாத உயர்ரக இருசக்கர வாகனத்தில் வந்த நபர் 2 சிறுவர்களையும் இடித்து கீழே தள்ளியுள்ளார். இதில், நிலைதடுமாறி கீழே விழுந்த சிறுவர்களை தாக்கிய அந்த நபர், சிறுவர்களிடமிருந்த தங்க நகை, வாட்ச், செல்போன் ஆகியவற்றை தருமாறு மிரட்டியுள்ளார். அப்போது பொதுமக்கள் வருவதை கண்ட அந்த கொள்ளையன் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

பின்னர் வீட்டிற்கு வந்து சிறுவர்கள் நடந்ததை தங்களது சகோதரரான துல்கிபல் என்பவரிடம் கூறினர். உடனே சகோதரர், காரில் சிறுவர்களை அழைத்துக் கொண்டு கொள்ளையனை தேடினார். அப்போது கொள்ளையன், தேனாம்பேட்டையில் உள்ள மருத்துவமனை அருகே நின்றிருப்பதை கண்டு அவனை துரத்திச் சென்றபோது இருசக்கர வாகனத்தில் வேகமாக தப்பிக்க முயன்றுள்ளார். அப்போது அவனை விரட்டிச் சென்ற சகோதரர் ஆயிரம்விளக்கு மசூதி அருகே இருசக்கர வாகனத்தை மோதியதில் கொள்ளையன் கீழே விழுந்து இருசக்கர வாகனத்தை விட்டு விட்டு தப்பியோடினார்.

இதையடுத்து அங்கு இரவு நேர முழு ஊரடங்கு ரோந்து பணியில் இருந்த ஆயிரம் விளக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பிரகாஷிடம் நடந்ததை சிறுவர்கள் கூறினர். இந்நிலையில், சிறிது நேரம் கழித்து கொள்ளையன் இருசக்கர வாகனத்தை எடுக்க வந்தபோது உதவி ஆய்வாளர் பிரகாஷ், தலைமைக்காவலர் சாமுன், காவலர் விஜயகுமார் ஆகியோர் அந்த நபரை பிடிக்க முயன்றனர். அப்போது அனைவரையும் தள்ளி விட்டு அந்த நபர் தப்பி ஓடினார். உதவி ஆய்வாளர் பிரகாஷ் விடாமல் கொள்ளையனை சினிமா பாணியில் சுமார் 1 கிமீ தூரம் வரை துரத்தி சென்று மடக்கிப் பிடித்தார்.

அதன்பிறகு, கொள்ளையனிடம் நடத்திய விசாரணையில் தொடர் நகை பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு வரும் குற்றவாளி அஜித் (எ) முனுசாமி என்பது தெரியவந்தது. மேலும், அஜித் போலீஸ் பிடியில் சிக்குவதற்கு சற்று நேரத்திற்கு முன் திருவல்லிக்கேணி மற்றும் பூக்கடை பகுதிகளில் நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டதும், நுங்கம்பாக்கத்தில் சிறுவர்களிடம் நகை பறிப்பு முயற்சியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இதனையடுத்து அஜித்தை கைது செய்து நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதுமட்டுமல்லாமல் அஜித் வைத்திருந்த நகைகளை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. சினிமா பாணியில் கொள்ளையனை துரத்திப் பிடித்து கைது செய்த உதவி ஆய்வாளர் பிரகாஷூக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com