நிஜமாகவே கண்ணீர் விடும் முதலைகள்.. கடும் நிதி நெருக்கடியில் பூங்கா!!

நிஜமாகவே கண்ணீர் விடும் முதலைகள்.. கடும் நிதி நெருக்கடியில் பூங்கா!!
நிஜமாகவே கண்ணீர் விடும் முதலைகள்.. கடும் நிதி நெருக்கடியில் பூங்கா!!
Published on

கொரோனா பரவலைத் தடுக்கும் பொருட்டு அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக முதலைகள்கூட உணவின்றி பாதிக்கப்பட்டுள்ளன. சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள முதலைப் பூங்கா கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த நான்கு மாதங்களாக சுற்றுலாப் பயணிகள் வருகையும் டிக்கெட் விற்பனையும் இல்லாமல் பூங்காவை நிர்வகிப்பதற்குத் தேவையான நிதியின்றி தவித்துவருகிறார்கள். இந்தியாவிலேயே மிகப்பெரிய முதலைப் பூங்காவான அங்கே ஊழியர்களுக்கு மாதந்தோறும் சம்பளம் வழங்கமுடியவில்லை. முதலைகளுக்கு உணவு வழங்குவதற்கும் சிரமமான நிலை ஏற்பட்டுள்ளது என்று பூங்கா நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

இங்கு ஆண்டுக்கு 50 லட்சம் நுழைவுச்சீட்டுகள் விற்பனையாகும். அதில் கிடைத்த வருமானமே பூங்காவின் பாதி வருமானமாக இருந்துவந்தது. மார்ச் 16 ஆம் தேதி முதல் பூங்கா மூடிக்கிடப்பதால், எப்போது திறக்கப்படும் என்பது தெரியாமல் காத்திருக்கின்றனர் பூங்கா ஊழியர்கள்.

ஊரடங்கு கோடைகாலத்தில் வந்ததால், இதுவரை ஒரு கோடியே 40 லட்சம் ரூபாய் செலவாகியுள்ளது. 25 லட்சம் பார்வையாளர்களின் வருகை குறைந்துள்ளது என்று முதலைப் பூங்கா இயக்குநர் ஆல்வின் யேசுதாசன் சுட்டிக்காட்டியுள்ளார். "இப்போதுள்ள நிதியை வைத்து அடுத்து மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு மட்டுமே பூங்காவை நிர்வகிக்கமுடியும்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதார நெருக்கடி காரணமாக ஊழியர்களுக்கான சம்பளத்தில் 10 முதல் 50 சதவீதம் வரை பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், இணையதளத்தில் மக்களிடம் நிதி கேட்டு பூங்கா நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

சென்னைக்கு அருகில் 8.5 ஏக்கர் பரப்பில் கடற்கரையோரமாக இந்த முதலைப் பூங்காவை 1976 ஆம் ஆண்டு உருவாக்கியவர் பாம்பு நிபுணரான அமெரிக்கர் ரோமுலஸ் விட்டேக்கர். இங்கு 2 ஆயிரத்துக்கும் அதிகமான முதலைகள், பாம்புகள், ஆமைகள் உள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com