அரசு உத்தரவை மீறி பள்ளி, வணிக வளாகங்கள் ஏதேனும் திறக்கப்பட்டால் நிரந்தரமாக சீல் வைக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களையும் வரும் 31 ஆம் தேதி வரை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதேசமயம் பத்து, பதினொன்று மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மற்றும் நுழைவுத் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த கல்லூரிகள் தொடர்ந்து இயங்கும் என்றும் அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் திரையரங்குகள், வணிக வளாகங்கள், பூங்காக்கள், நீச்சல் குளங்கள், டாஸ்மாக் பார்கள் அனைத்தையும் வரும் 31ஆம் தேதி வரை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் சுற்றுலா செல்ல திட்டமிட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்நிலையில், சென்னை மாநகராட்சி சார்பிலிருந்து அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதில், அரசு உத்தரவை பள்ளிகள், வணிக வளாகங்கள், நீச்சல் குளங்கள், உடற்பயிற்சி மையங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் ஏதேனும் நாளை முதல் 31ஆம் தேதிக்குள் திறக்கப்பட்டிருந்தால், அது நிரந்தமாக சீல் வைத்து மூடப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், சீறிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.