மார்ச் 10ஆம் தேதி முதல் மார்ச் 17ஆம் தேதி வரையில் வேளச்சேரி ஃபீனிக்ஸ் வந்தவர்களின் பட்டியலை சென்னை மாநகராட்சி கேட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வருகிறது. கடந்த மூன்று நாட்களில் மட்டும் 242 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சுகாதாரத்துறை தங்கள் பணியை தீவிரப்படுத்தியுள்ளன. அத்துடன் அரசுச் சக்கரம் இன்னும் வேகமாக சுழல ஆரம்பித்திருக்கிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் சென்னை மாநகராட்சியும் முழுவீச்சில் இறங்கியுள்ளது.
இந்நிலையில், கொரோனா தொடர்பாக சென்னை மாநகராட்சியிடம் இருந்து முக்கிய செய்தி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், “வேளச்சேரி ஃபீனிக்ஸ் மாலில் உள்ள லைஃப்ஸ்டைல் கடையில் வேலை பார்க்கும் 3 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அங்கு வேலை செய்யும் மற்றவர்கள் தற்போது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
மார்ச் 10ஆம் தேதியில் இருந்து 17ஆம் தேதி வரையில் ஃபீனிக்ஸ் மாலிற்கு, குறிப்பாக லைஃப்ஸ்டைல் கடைக்கு சென்று வந்தவர்கள் மற்றும் மாலில் வேலை செய்யும் அனைத்து ஊழியர்களும் மிகக் கவனமாக இருக்கம்படியும், கொரோனா அறிகுறிகள் ஏதேனும் தென்பட்டால் உடனே மருத்துவ உதவிக்கு 044 2538 4520 மற்றும் 044 4612 2300 ஆகிய எண்களை அழைக்கும்படியும்” கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன் இந்த தகவலை உடனே பகிர்ந்து, குறிப்பிட்ட நாட்களில் அங்கு சென்று வந்தவர்களுக்கு அறியப்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.