காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளருக்கான கணினி திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்பை, சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் காவல் ஆணையர் தொடங்கி வைத்தார்.
சென்னை காவல் துறையில் பணிபுரியும் காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் கணினி வழி குற்றங்களில் சிறந்த முறையில் புலனாய்வு மேற்கொள்ளவும், ஆன்லைன் மூலம் பெறப்படும் சைபர் கிரைம் தொடர்பான பொதுமக்களின் புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கவும், சமூக வலைதள குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், 'கணினி திறன் மேம்பாட்டு பயிற்சி' வகுப்புகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், சென்னை பெருநகரில் பணிபுரியும் 1,609 ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்களுக்கு சென்னையில் உள்ள 6 கல்லூரி மையங்களில் கணினி திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்புகள் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் கணினி திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்தார்.
இந்த பயிற்சி வகுப்பில் அடிப்படை கணினி பயிற்சி, கணிணி வழி குற்றங்களில் புலானய்வு மேற்கொள்வது, தடயங்களை சேகரிப்பது, சேகரித்த தடயங்களை பாதுகாப்பது, சமூக வலைதள குற்றங்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுப்பது, CCTNS வலை தளத்தை கையாள்வது, பவர்பாயிண்ட் பிரசன்டேஷன் தயாரிப்பது குறித்து பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.
இந்த பயிற்சி வகுப்பு நேற்று முதல் ஒரு பேட்ஜிற்கு 2 நாட்கள் வீதம் ஒரு மாதத்திற்கு 6 கல்லூரி மையங்களில் நடத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் ஐஐடி இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தி, சென்னை காவல் கூடுதல் ஆணையாளர் லோகநாதன் உட்பட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.