சென்னை முழுவதும் இதுவரை ஒரு லட்சத்து 50 ஆயிரம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக பெருநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
அதிகரித்து வரும் குற்றச்சம்பவங்களில் குற்றவாளிகளை அடையாளம் காண்பதிலும், குற்றங்கள் நடக்காமல் தடுப்பதிலும் சிசிடிவி கேமராக்கள் முக்கிய பங்காற்றி வருகின்றன. அதனால் அவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் சென்னை காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் சிசிடிவி கேமராக்களை பொறுத்துவதன் அவசியம் குறித்து அடிக்கடி கூறி வருகிறார்.
இந்நிலையில் சென்னை அண்ணா மேம்பாலம், கதீட்ரல் சாலை, ராதாகிருஷ்ணன் சாலை உள்ளிட்ட பகுதிகளில் புதிதாக 446 சிசிடிவி கேமாராக்களை இன்று பெருநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் திறந்து வைத்தார். அதற்காக அண்ணா மேம்பாலம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆணையர் விஸ்வநாதன், கண்காணிப்பு கேமராக்களைத் தொடங்கி வைத்த பின் பேசிய அவர், சென்னை முழுவதும் 3 முதல் 4 லட்சம் கேமராக்கள் பொறுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இதுவரை சென்னையில் 1,50,000 சிசிடிவி கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், அனைத்து கேமராக்களையும் ஒரே இடத்திலிருந்து கண்காணிக்கும் வகையில் செயலி உருவாக்கப்பட்டுள்ளதாகவும் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.