கொசுக்களின் இனப்பெருக்கத்திற்கு காரணமாக அமையும் வீடுகள், நிறுவனங்களுக்கு ரூபாய் 1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என சென்னை ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பருவமழை வந்தாலே நோய்களும் வந்துவிடுகின்றன. பெரும்பான்மையான நோய்களுக்கு கொசுக்களே காரணமாக அமைகின்றன. தமிழகத்தில் டெங்கு உள்ளிட்ட காய்ச்சலுக்கு ஆங்காங்கே ஏற்படும் உயிரிழப்புகள் மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்நிலையில் கொசுக்களின் இனப்பெருக்கத்திற்கு காரணமாக அமையும் வீடுகள், நிறுவனங்களுக்கு ரூபாய் 1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என சென்னை ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “கொசு ஒழிப்பு அதிகாரிகள் ஆய்வுக்கு வரும்போது கட்டடங்களில் கொசுக்களின் இனப்பெருக்கம் நடைபெறுவது கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்களுக்கு ரூபாய் 5,000 முதல் ரூபாய் 1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். கொசுக்களின் இனப்பெருக்க தீவிரத்தை பொறுத்து இந்த அபராதம் மாறுபடும். கொசுக்கள் உற்பத்தி அதிகமாக இருக்கும்பட்சத்தில் கட்டங்களின் உரிமத்தை ரத்து செய்வது கூட பரிசீலிக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமில்லால் குறிப்பிட்ட இடங்களை பட்டியலிட்டு அங்கெல்லாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தபடுமாறு கூறப்பட்டுள்ளது. பயன்படுத்தப்படாத டயர்கள், தேங்காய் நட்டுகள், தேநீர் கப்கள் போன்றவற்றில் கொசுக்களின் இனப்பெருக்கத்திற்கு அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டுள்ளது.