அம்பத்தூரில் மாநகராட்சி அலுவலகம் முன்பு தூய்மைப் பணியாளர்கள் பணியை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 500-க்கும் மேற்பட்டோர் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை மாநகராட்சி அம்பத்தூர் மண்டலம் 7, அலுவலகத்தில் 500-க்கும் மேற்பட்ட சுகாதார ஊழியர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் பல ஆண்டுகளாக ஒப்பந்த ஊழியர்களாக பணியாற்றி வருவதால் ஊதிய உயர்வு பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பலமுறை கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாததால் இன்று பணிப்புறக்கணிப்பு செய்து 500-க்கும் மேற்பட்டோர் மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் மாநகராட்சி மண்டல அலுவலக வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அம்பத்தூர் போலீசார் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் பேச்சுவார்த்தையை புறக்கணித்து தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் சாமுவேல் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அவர்கள் கோரிக்கையை அரசிடம் கொண்டு சென்று உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்தார். அதையடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.