சென்னையில் முதல்முறையாக காவலர்களுக்காக, காவல்நிலையத்தில் அமைக்கப்பட்ட நூலகத்தை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் திறந்து வைத்தார்.
சென்னை மயிலாப்பூர் காவல்நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள நூலகத்தை திறந்து வைத்த அவர், புத்தக வாசிப்பின் அவசியம் குறித்து காவலர்களுக்கு எடுத்துரைத்தார். இதையடுத்து காவலர்கள் நடைப்பயிற்சி செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள நடைப்பாதையை பார்வையிட்ட அவர், உடற்பயிற்சி மையத்தையும் தொடங்கி வைத்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய விஸ்வநாதன், செப்டம்பர் மாத இறுதிக்குள் சென்னை முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
சிசிடிவி கேமராவால் குற்றங்கள் விரைவில் கண்டுபிடிக்கப்படுவதோடு, அவை முன்கூட்டியே தடுக்கப்படுவதாகவும் அவர் கூறினார். மயிலாப்பூர் காவல்நிலையத்தைப் போன்றே, சென்னையின் பிற காவல்நிலையங்களிலும் நூலகம் அமைக்கப்படும் எனக்கூறிய அவர், காவல்நிலையத்தை தூய்மையாக வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.