தமிழகத்துக்குள் வரும் ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களின் எல்லை பகுதிகளில் போதைப் பொருட்கள் நடமாட்டத்தை தடுக்க, அங்குள்ள சோதனைச் சாவடிகளில் மாநகர காவல் ஆணையர் நேற்று நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
இதில் ஆவடி மாநகர காவல் எல்லைக்குட்பட்ட 25 காவல் நிலைய சோதனை சாவடி பகுதிகளில் ஆணையர் சங்கர் ஆய்வு செய்தார். நேற்று நள்ளிரவு ரோந்து பணியில் ஈடுபட்ட ஆணையர், விடிய விடிய அனைத்து சோதனை சாவடிகளிலும் நேரடியாக சென்று திடீர் ஆய்வு செய்தார்.
ஆந்திரா, கர்நாடகா என அண்டை மாநில எல்லைப் பகுதிகளாக பார்க்கப்படும் நசரத்பேட்டை, செங்குன்றம், திருநின்றவூர், செவ்வாப்பேட்டை, மீஞ்சூர் உள்ளிட்ட பல்வேறு சோதனை சாவடிகளில் நடைபெற்ற வாகன தணிக்கைகளை ஆணையர் சங்கர் பார்வையிட்டார்.
இந்நிலையில், சோதனை சாவடிகளில் கண்காணிப்பு பணியின் போது கஞ்சா, குட்கா போன்ற போதை பொருட்கள் கடத்தலை தடுத்திட போலீசாருக்கு ஆணையர் உத்தரவிட்டார். மேலும் தேடப்படும் குற்றவாளிகள் நடமாட்டத்தை கண்காணிக்கவும் அறிவுறுத்தினார்.
காவல் ஆணையர் சங்கர் பொறுப்பேற்றதில் இருந்து தொடர்ந்து இரு வாரங்களில் அவர் மேற்கொண்ட ரவுடி வேட்டையில் சுமார் 150-க்கும் மேற்பட்ட ரவுடிகளை கைது செய்துள்ளார். மேலும் வாரத்தில் ஒருநாள் பொதுமக்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை நேரடியாக பெற்று வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.