இரவு பணிக்கு செல்ல வேண்டிய தலைமை காவலர் குடிபோதையில் காரை தாறுமாறாக ஓட்டி வந்ததாக பொதுமக்கள் அவரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
சென்னை அனகாபுத்தூரைச் சேர்ந்தவர் ராமதுரை. இவர் மணிமங்கலம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், நேற்று இரவு பணி பார்ப்பதாக ஆய்வாளரிடம் கேட்டு வாங்கியுள்ளார்.
அதனால் பகல் முழுவதும் மது குடித்துவிட்டு போதையில் காரை தாறுமாறாக இயக்கியுள்ளார். போதையில் தன்னிலை மறந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையில் சென்றவர்களை இடித்து விட்டு சென்றுள்ளார். இதில் பல்லாவரம் வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற மகேஷ்குமார் என்பவருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
இதையடுத்து அங்கிருந்தவர்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்ததின் பேரிலும், பொதுமக்களின் உதவியோடும் மது போதையில் காரை ஓட்டிய தலைமை காவலரை மீனம்பாக்கம் அருகே மடக்கி பிடித்தனர்.
பிடிபட்ட போலீஸ்காரரை குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்த நிலையில் காரை பறிமுதல் செய்த போலீசார், அவரிடம் விசாரித்து வருகின்றனர்.