சென்னையின் பல்வேறு இடங்களில் சங்கிலிப் பறிப்பில் ஈடுபட்டு வந்த 3 பேரை சிசிடிவி காட்சிகள் மூலம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை அரும்பாக்கம், அண்ணாநகர் உட்பட 9 இடங்களில் சங்கிலிப் பறிப்பில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் தேடி வந்தனர். குற்றவாளிகளை பிடிக்க அரும்பாக்கம் காவல் ஆய்வாளர் ரவிக்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. சங்கிலிப் பறிப்பு நடந்த இடங்கள் அனைத்தும் சிசிடிவி கேமரா இல்லாத இடங்களாகவே இருந்தன. இதனால் குற்றவாளிகளை பிடிப்பது சவாலாக இருந்தது. சங்கிலிப் பறிப்பு நடந்த இடங்களுக்கு அருகே இருந்த சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் ஆராய்ந்தனர். அதில் அவர்களுக்கு முக்கிய துப்பு ஒன்று கிடைத்தது. 9 இடங்களிலும் பதிவெண் இல்லாத இருசக்கர வாகனம் ஒன்றில் இருவர் வலம் வரும் காட்சிகள் காவல்துறையினருக்கு கிடைத்தன. அதிலிருப்பவர்களை காவல்துறையினர் தேடி வந்தனர்.
இந்த நிலையில் அரும்பாக்கத்தில் இருசக்கர வாகனத்தில் சுற்றிக் கொண்டிருந்த போது இருவரும் காவல்துறையினரிடம் சிக்கினர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் சங்கிலிப் பறிப்பில் மேலும் ஒருவருக்கு தொடர்பிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து சங்கிலிப் பறிப்பில் ஈடுபட்டதாக சபீர் பாட்ஷா, பிரகாஷ் மற்றும் ராஜ்குமார் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 41 சவரன் நகைகள், 2 இருசக்கர வாகனங்கள் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மூவரும் சங்கிலிப் பறிப்புக்காக சிசிடிவி கேமரா இல்லாத இடங்களை தேர்வு செய்துள்ளனர். இருவர் இருசக்கர வாகனத்தில் சென்று சங்கிலியை பறிப்பதை வழக்கமாக கொண்டிருந்துள்ளனர். ஒரு நபர் சங்கிலிப் பறிப்பு நடக்கும் இடத்துக்கு அருகில் காருடன் காத்திருப்பார். சங்கிலியைப் பறித்த இருவரும் அதனை அருகில் இருக்கும் காரில் வீசிவிட்டு சென்று விடுவார்கள்.
இதன்பின்னர் தெருவில் சுற்றும் இருவரை சந்தேகத்தின் பேரில் யாராவது பிடித்து விசாரித்தால் கூட அவர்களிடம் சங்கிலிகள் எதுவும் இருக்காது. இதுதான் சங்கிலிப் பறிப்பு கும்பலின் மாஸ்டர் பிளான் என்கின்றனர் காவல்துறையினர். சிசிடிவி கேமரா இல்லாத இடங்களை கொள்ளையர்கள் தேர்வு செய்திருப்பதை சுட்டிக்காட்டிய காவல்துறையினர், அனைத்து இடங்களிலும் மக்கள் சிசிடிவி கேமராவை பொருத்தினால் இதுபோன்ற குற்றங்களை தடுக்க முடியும் என்று தெரிவித்துள்ளனர்.