சென்னை செல்போன் திருடர்களின் ‘அமாவாசை பூஜை’ - வெளிவந்த உண்மைகள்..!

சென்னை செல்போன் திருடர்களின் ‘அமாவாசை பூஜை’ - வெளிவந்த உண்மைகள்..!
சென்னை செல்போன் திருடர்களின் ‘அமாவாசை பூஜை’ - வெளிவந்த உண்மைகள்..!
Published on

சென்னையில் ஏழுகிணறு, கொருக்குப்பேட்டை, வண்ணாரப்பேட்டை, புளியந்தோப்பு உள்ளிட்ட இடங்களில் அதிகாலை நேரங்களில் தனியாக நடந்து செல்லும் பெண்களை குறிவைத்து செல்போன் பறிப்புகள், பணப்பையை பறிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. 

கடந்த 30ஆம் தேதி மட்டும் சென்னை ஏழுகிணறு காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், அதிகாலை நேரத்தில் 4 பேரிடம் செல்போன் பறிப்பு சம்பவங்கள் நிகழ்ந்தன. இது தொடர்பாக ஏழுகிணறு காவல் ஆய்வாளர் தவமணி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டது. நேற்று திருவொற்றியூர் ரயில்நிலையத்தில் செல்போன் கொள்ளையில் ஈடுபட்ட 2 கொள்ளையர்களை ஆய்வாளர் தவமணி தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் துரத்தி பிடித்து கைது செய்தனர். 

கைதானவர்கள் திருவொற்றியூரை சேர்ந்த அரவி என்ற அரவிந்தன் மற்றும் புளியந்தோப்பை சேர்ந்த ஓசை மணி எனத் தெரியவந்தது. ஓசை மணி குண்டர் சட்டத்திலிருந்து தற்போது தான் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். கைதான இருவரும் காலையில் போதையுடன் ஏழுகிணறு, கொருக்குப்பேட்டை, வண்ணாரப்பேட்டை, புளியந்தோப்பு போன்ற முக்கியமான சாலைகளின் சந்திப்பில் இருச்சக்கர வாகனங்களில் சுற்றி வந்துள்ளனர். அப்போது தனியாக நிற்கும் பெண்களை குறி வைத்து அவர்களுடைய செல்போன் மற்றும் கைப்பையை பறிப்பதை வாடிக்கையாக கொண்டிருந்துள்ளனர். இந்த உண்மைகள் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

ஒரே நாளில் காலை 6 மணி முதல் மாலை 6 மணிக்குள் நான்கு அல்லது ஐந்து இடங்களில் வழிப்பறிகளில் ஈடுபட்டு, பின்னர் தலைமறைவாகி ஆந்திரா சென்று விடுவதை இருவரும் வழக்கமாக கொண்டிருந்ததாக தெரிகிறது. 

கடந்த 30ஆம் தேதியும் ஏழுகிணறு பகுதியில் நான்கு இடங்களில் கொள்ளையடித்து விட்டு, உடனடியாக ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள கசந்தர் என்னும் இடத்திற்கு சென்றுள்ளனர். அங்கு ஒவ்வொரு அமாவாசை அன்றும் நடக்கும் திருடர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக இருந்துள்ளனர். அந்தக் கூட்டத்தில் அவர்கள் தவறாமல் கலந்து கொண்டு வந்ததை விசாரணையின் மூலம் காவல்துறையினர் தெரிந்துகொண்டனர்.

தென்னிந்தியாவில் இருக்கக்கூடிய முக்கியமான மிகப்பெரிய திருடர்கள் மற்றும் கொள்ளையர்கள் எல்லாம் கூடி இந்த அமாவாசை பூஜையை கொண்டாடி வந்துள்ளனர். இந்தப் பூஜையில் பங்கேற்பதன் மூலம் சிறிய திருடர்களும், தென்னிந்திய அளவில் உள்ள மிகப்பெரிய கொள்ளையர்களும் தொடர்பில் இருந்து வந்துள்ளனர். 

கைது செய்யப்பட்ட இருவரையும் காவல்துறையினர் புழல் சிறையில் அடைத்துள்ளனர். இவர்கள் இருவர் மீதும் தண்டையார்பேட்டை, புளியந்தோப்பு, மெரினா உட்பட சென்னையின் பல்வேறு காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. எனவே இருவர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதற்கான பரிந்துரைக் கடிதத்தை ஏழுகிணறு போலீசார் சென்னை மாநகர காவல்துறை ஆணையருக்கு அனுப்பி உள்ளனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com