சென்னையில் 47-வது புத்தகக் கண்காட்சி நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் 2024 ஜனவரி மாதம் 5-ஆம் தேதி தொடங்கி, 21- ஆம் தேதி வரை நடைபெற்றது.
வழக்கம்போல் புத்தகப்பிரியர்களின் பேராதரவால் கண்காட்சியானது திருவிழா போன்றே காட்சியளித்தது. ஒவ்வொரு அரங்கிலும் சில புத்தகங்கள் தள்ளுபடி விலையில் கிடைத்தாலும் அநேகமாக அனைத்து புத்தக அரங்கிலும் 10 சதவிகித தள்ளுபடியில் புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டன. மக்களின் வசதிக்காக கார்பார்க்கிங் டூவீலர் பார்க்கிங், சிற்றுண்டிகள் போன்றவைக்கான அரங்கங்களும் ஒதுக்கப்பட்டிருந்தது.
குழந்தைகளுக்கு புத்தக வாசிப்பு ஏன் முக்கியம்?
உடலுக்கு எப்படி உடற்பயிற்சி முக்கியமோ அதேபோல, புத்தக வாசிப்பு என்பது நம் உள்ளத்திற்கான பயிற்சி. குழந்தைகள் புத்தம் படிக்கும்போது அதிலிருக்கும் வார்த்தைகளிலும் கதைக்களத்திலும், ஓவியங்களிலும் அவர்களின் முழுக்கவனமும் இருப்பதால் அவர்களின் கவனிப்புத்திறனானது அதிகரிக்கிறது.
இதன் காரணமாக எந்தவொரு செயலையும் கவனத்தோடு செய்யும் ஆற்றல் மேம்படும். அவர்கள் படிக்கும் புத்தகம் அவர்களை வெவ்வேறு நபர்களுடன் வேறு ஓர் உலகத்திற்கு அழைத்துச் செல்லும். மன அழுத்தத்தை குறைத்து இது ஒரு புதிய சூழலைக் கொடுத்து புத்துணர்வை ஏற்படுத்தும். அதோடு எழுத்தாற்றல், படைப்பாற்றல், சிந்தனைத்திறன் போன்ற பல திறன்களை வளர்க்க உதவுகிறது.
இப்படி புத்தகம் ஒரு மனிதனை மெருகேற்றும் என்பதால்தான் பிக்பாஸ் சீசனில் கூட கமல் புத்தக பரிந்துரையை கடைபிடித்து வருகிறார்.
நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடந்து முடிந்த புத்தக கண்காட்சியில், பள்ளி குழந்தைகள் முதல் முதியோர் வரை புத்தக அரங்கங்களில் தங்களுக்கான புத்தகத்தை தேடி தேடி வாங்கியது, புத்தகம் படிக்கும் வழக்கம் மக்களிடையே இன்னும் இருக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடிந்தது.
ஆனால் வழக்கத்திற்கு மாறாக இந்த ஆண்டு பெய்த பெருமழை சேதத்தால், பல பதிப்பகங்கள் தங்களின் புத்தகத்தை வெள்ளத்திலும் மழையிலும் இழந்ததோடு மட்டுமல்லாமல், மைதானம் முழுவதும் நிரம்பி இருந்த சேறுசகதி போன்ற மோசமான சூழலால் இரு தினங்கள் புத்தக கண்காட்சிக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்து.
இதனால் விற்பனை பாதிக்கப்பட்டதா என்பது குறித்து zero degree பதிப்பகத்தாரின் உரிமையாளர் திருமதி. R.காயத்ரி அவர்களிடம் பேசினோம்.
”சென்ற ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் வாசகர்களின் வருகை அதிகமாகவே இருந்தது. நெருக்கடியை போக்கும் விதமாக சிறிது சிறிது இடைவெளி விட்டு ஸ்டால் அமைக்கப்பட்டிருந்தது. இதனால், தேவையான புத்தகங்களை அட்டவணைப்படுத்த எங்களுக்கு போதுமான ஸ்டால் கிடைக்கவில்லை.
கிடைத்த 2 ஸ்டாலில் புத்தகத்தை அடுக்கிக் கொண்டோம். துரதிர்ஷ்டவசமாக திடீரென்று பெய்த மழையில் எங்கள் ஸ்டால் பாதிக்கப்பட்டு கிட்டத்தட்ட 200 புத்தகங்கள் சேதமடைந்தது. தவிரவும், இரண்டு நாள் விடுமுறையில் விற்பனையும் பாதிக்கப்பட்டது. என்றார்.
ஸ்டாலில் எந்தவகையான புத்தகங்கள் அதிகம் வாங்கப்பட்டது? இந்த வருடம் புதிதாக வெளியிட்ட புத்தகங்கள் எவை எவை என்ற நமது கேள்விக்கு,
”இயற்கை சம்பந்தமான புத்தகங்கள் அதிகமாக வாங்கப்பட்டது. கலை இலக்கியம் தவிர, AI நுண்ணறிவு சம்பந்தமாக எழுதப்பட்ட புத்தகங்கள் அதிகளவு விற்பனையானது. இந்த வருடம் வெளிவந்த புத்தகங்கள் எவை என்றால்,
மாயக்குரல்- தருணாதித்தன்
போரிலக்கிய வாசிப்புகள்- ஆர். ராமசாமி (கட்டுரைத் தொகுப்பு)
நீர்முள் அறல், (சிறுகதைத் தொகுப்பு)
கடைசி தேநீர் (காதல் ததும்பும் கதைகள்)
ஃ புள்ளிகள், பெருங்களிறு
மக(ர்)ராசன் அம்பேத்கர் பற்றிய கட்டுரை
அந்நியனுடன் ஒரு உரையாடல்-சாரு நிவேதா (கேள்வி பதில்)
அந்தோனின் ஆர்த்தோ - சாரு நிவேதா(நாடகம்)
ரஸ்கின் பாண்ட்- சிறுகதைகள்(மொழிபெயர்ப்பு)
ஹரிஷ் ராகவேந்தர் இதை தவிர பா.ராகவனின் மெட்ராஸ் பேப்பர், அத்துடன் Making of the CEO
நல்லவனுக்கு எதுக்கு இன்காக்னிடோ, யுத்த காண்டம். தவிர மிக முக்கியமான AI எனும் ஏழாம் அறிவு - ஹரிஹரசுதன் தங்கவேலு
இதில் அதிகமாக விற்ற நூல் எது என்று பார்த்தால் செல்வேந்திரனின் வாசிப்பது எப்படி? மேடைப்பேச்சின் பொன்விதிகள், ஸீரோ கிடிரி, எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்ஸி பனியனும், சாருவின் பெட்டியோ, பா.ராகவனின் மணிப்பூர் கலவரம்.. இந்தப் புத்தகம் எல்லாம் நன்றாக விற்பனை ஆனது.” என்றார்.
குழந்தைகளுக்கான புத்தகங்களில் எவை கவனத்தை ஈர்த்தது என்ற வரிசையில் வாசகர்களின் விருப்பத்தின்படி,
இரும்புக்கை மாயாவி, சுஸ்கிவிஸ்கி , முகமூடி வேதாளர், ரிப் கிர்பி, டிடெக்டிவ் சார்லி ஆகிய குழந்தைகளுக்கான கதைகள். இதை தவிற புதிருக்குள் பெரும் பயணம், பள்ளாத்தாக்கு படலம், டெக்ஸின் 75-வது புத்தகமும் அதிகம் விற்பனையானது தெரியவந்தது. மேலும் இந்தமுறை வரலாற்று நாவல்கள் கவிதை நூல்களை பெரும்பாலும் மக்கள் வாங்கிச்சென்றதாகவும் தெரியவந்தது.