14 வருடங்களாக கிளிகளின் சரணாலயமாக விளங்கி வந்த சென்னை ராயப்பேட்டை பகுதியை சேர்ந்த சேகரின் இல்லத்தை தற்போது விற்பனை செய்யும் முடிவுக்கு வந்துள்ளனர் அதன் உரிமையாளர்கள். இனி அங்கு தினம் உணவு தேடி வரும் கிளிகளின் நிலை என்ன ஆகுமோ என்ற வருத்தம் பறவை பிரியர்களை ஆட்கொள்கிறது
சென்னை ராயப்பேட்டை பாரதி சாலையை மாலையில் கடப்பவர் யாரும் அங்கு ஆயிரக்கணக்கில் சிறகடிக்கும் கிளிகளை காணாமல் செல்ல முடியாது. அதற்கு காரணம் சென்னையின் "பேர்ட் மேன்" என அழைக்கப்படும் சேகர். 35 வருடங்களுக்கு மேலாக இங்கு வசித்து வரும் சேகர் தினம் காலை, மாலை இரு வேலைகள் கிளிகளுக்கு உணவளிக்கிறார். சுமார் 2000 முதல் 6000 கிளிகள் தினம் இங்கு உணவருந்துகின்றன. அண்மையில் இந்த வீட்டை விற்க முடிவு செய்துள்ள உரிமையாளர்கள் தற்போது வீட்டை காலி செய்யுமாறு சேகருக்கு பல்வேறு வகையில் அழுத்தம் குடுத்து வருகின்றனர். பல வருடங்களாக இங்கு பசி தீர்க்கும் பறவைகள் நிலை என்ன என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுகிறது.
இது குறித்து சேகரிடம் பேசினோம் " 15 வருடங்களாக எனக்கு கிளிகள், கிளிகளுக்கு நான் என வாழ்ந்துட்டேன். இப்போ திடீர்னு இவைகளை விட்டு போக மனசு வரல. உரிமையாளரிடம் பேசி பார்த்தேன். அவுங்க முடிவு மாதிக்குற மாதிரி தெரியல. நான் போயிட்டா இவைகளை யார் பத்துப்பா" என்று பெருமூச்சி விடுகிறார்
தன் நேரம் முழுவதையும் பறவைகளின் நலனுக்காக செலவழிக்கும் சேகரை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. வெளிநாடுகளில் இருந்து பல சுற்றுலா பயணிகள் இவைகளை காண ஆர்வம் காட்டுகின்றனர். சிலர் உதவிகளும் செய்ய முன்வருகின்றனர். சர்வதேச அளவில் சுற்றுலா பயணிகளை கவர்வது சேகரின் பறவைகள் மட்டுமல்ல, இவரிடம் உள்ள 200 ஆண்டுகள் வரை பழமை வாய்ந்த கேமராக்களும்தான். சேகர் ஒரு கேமிரா மெக்கானிக், ஆங்கிலேயர் காலத்தில் இருந்து 3500கும் அதிகமான பல பழமையான கேமராகளை பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறார் இவர். எங்கு தேடினாலும் தற்போது வாங்க முடியாத இந்த காந்தி காலத்து அறிய கேமராகள் மற்றும் அது தொடர்பான புகைப்படக்கருவிகள் ஆகியவற்றை உயிருள்ள கிளிகளின் நலனுக்காக தற்போது விற்பனை செய்யும் முடிவுக்கு வந்துள்ளார்.
"எங்கு தேடினாலும் இந்த கேமராகள் கிடைக்காது சார், என் வாழ்நாள் முழுவதும் கஷ்டப்பட்டு சேர்த்தது. இதை பலர் கேட்கிறார்கள், வெளிநாட்டுக்கு குடுக்க மனசு இல்லை. இங்கேயே யாராவது கேட்டால் விற்க தயாராக உள்ளேன். அதில் வரும் பணத்தை வைத்து இந்த வீட்டை வாங்கி பறவைகளை பராமரிப்பேன்" என்றார்.
இது குறித்து மிருக துயர் துடைப்பு கழக அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசியது புதிய தலைமுறை. ஏற்கனவே அந்த வீட்டின் உரிமையாளரிடம் பேசியதாகவும், அவர்கள் முடிவை மாற்றிக்கொள்ள மறுப்பு தெரிவித்து விட்டனர். கோடை காலத்தில் திடீரென உணவு கிடைப்பது தடைபட்டால் பறவைகள் மிகவும் துயரப்படும் என்று மூன்று மாதம் நேரம் கேட்டுளோம் என்றார்.
"அந்த வீட்டின் அருகமையிலேயே விருப்பம் உள்ளவர்கள் வீட்டின் மாடியில் உணவு வழங்க முயற்சித்து வருகிறோம். சிறுக சிறுக பறவைகள் மாற்று இடம் அழைத்து செல்ல முடிவு செய்துள்ளோம்" என்கிறார் மிருக துயர் துடைப்பு கழகதத்தை சேர்ந்த விலங்குகள் நல மருத்துவர் சொக்கலிங்கம்.
இவரை குறித்து அறிந்த நாகலாந்து கவர்னர், அரசு விருந்தினராக வந்து பறவையின் விருத்தி மற்றும் அவசியம் குறித்து பயிற்சி வகுப்பு எடுக்குமாறு அழைத்துள்ளார். ஆனால் கிளிகளை பராமரிக்க ஆள் இல்லை என்பதால் பயணத்தை தள்ளிப் போட்டு வருகிறார் சேகர்.
இந்தக் கிளிகளிடம் இருந்து மட்டும் என்னை பிரித்து விடாதீர்கள் என்ற ஒற்றை கோரிக்கையோடு தொடர்கிறது சேகரின் போராட்டம். அவரை சந்தித்து விட்டு வெளியே வந்தபோது ‘பறவையை கண்டான் விமானம் படைத்தான்’ பாடல் எங்கோ ஒலித்தது. ஆம்! சென்னைக்குள் விமானம் பறக்கலாம். ஆனால் உயிருள்ள கிளிகள் பறக்கதான் வழியில்லை. மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்!