செய்தியாளர்: ஜெ.அன்பரசன்
சென்னை டி.பி.சத்திரம் ஜோதியம்மாள் நகர் 9 வது தெரு பகுதியைச் சேர்ந்தவர் அமுதா (29). கடந்த 2023 ஆம் ஆண்டு இவரது வீட்டருகே மது போதையில் இளைஞர்கள் ஆபாசமாக பேசி வந்துள்ளனர். இதை அமுதா தட்டிக்கேட்ட போது அவரை கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளனர். இதனால், அமுதா டி.பி.சத்திரம் காவல்துறையில் புகார் அளித்தார். புகாரின் பேரில் அதே பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் (எ) ஜண்டா சந்தோஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், சிறையிலிருந்து வெளியே வந்த சந்தோஷ் (எ) ஜன்டா சந்தோஷ் முன்விரோதம் காரணமாக கடந்த 15.05.2024 அன்று அமுதாவின் அக்கா கணவரான செந்தில்குமார் என்பவரை தனது நண்பர்களோடு சேர்ந்து கத்தியால் குத்தியுள்ளார். இதுதொடர்பான வழக்கில், அமுதா அளித்த புகாரில் மீண்டும் சந்தோஷ் மற்றும் அவரது நண்பர் மனோஜ் குமார் (20) ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் நேற்று முந்தினம் சிறையிலிருந்து வெளியே வந்த இருவரும், நேற்று இரவு அமுதாவின் வீட்டுக்கு சென்று அமுதாவின் மீது பெட்ரோல் வெடிகுண்டை வீசியுள்ளனர். அப்போது அமுதாவும் அவரது அக்கா அமலாவும் தப்பியோடியதால் பெட்ரோல் வெடிகுண்டு வீட்டின் சுவரில் பட்டு தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனையடுத்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதன் பேரில் டி.பி.சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பெட்ரோல் வெடிகுண்டு வீசிய சந்தோஷ் அவரது நண்பர் மனோஜ் குமார் உள்ளிட்ட நான்கு பேரை டி.பி.சத்திரம் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்நிலையில், தப்பியோடிய சந்தோஷ் மற்றும் மனோஜ் குமார் தனக்கு கொலை மிரட்டல் விடுத்து வாட்ஸ்-ஆப் ஸ்டேட்டஸ் வைத்திருப்பதாகவும் தனக்கு காவல்துறையினர் பாதுகாப்பு அளிக்கும்படியும் அமுதா கேட்டுக் கொண்டுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.