சென்னை விமான நிலையத்தில் 16ம் தேதி (நேற்று) இரவு, விமானம் ஒன்று தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவசரமாக தரையிறங்கியதால், பிரதான ஓடுபாதையில் தடை ஏற்பட்டது.
இதுகுறித்து சென்னை விமான நிலைத்தில் உள்ள இந்திய விமான நிலைய ஆணையத்தின் தகவல் தொடர்பு துறை வெளியிட்ட செய்தி குறிப்பில் "பெல்காமில் இருந்து மைசூருக்கு, கடந்த 16ம் தேதி சென்ற ‘ட்ரு ஜெட்’ நிறுவனத்தின் ஏடிஆர் 72-500 ரக விமானத்தில் சக்கரம் வேலை செய்யாததால், இரவு 8.50 மணியளவில் அவசரநிலை அறிவித்தது.
இதனால் அந்த விமானம் சென்னை விமான நிலையத்துக்கு திருப்பி விடப்பட்டது. அந்த விமானம் கடந்த 16ம் தேதி இரவு 9.08 மணியளவில் சென்னை விமான நிலையத்தின் பிரதான ஓடுபாதையில் தரையிறங்கி நின்றது. பயணிகளுடன் அந்த விமானத்தை இழுத்துச் செல்ல முடியாது என்பதால், அதில் பயணம் செய்த ஒரு குழந்தை உட்பட 46 பயணிகளும் ஓடுபாதையிலேயே தரையிறக்கப்பட்டனர். அதன்பின்பு அந்த விமானம், ஓடு பாதையில் இருந்து இழுத்துச் செல்லப்பட்டது.
பிரதான ஓடுபாதையில் தடை ஏற்பட்டதால், இரண்டாவது ஓடுபாதை பயன்படுத்தப்பட்டது. இதில் 5 விமானங்கள் தரையிறங்கின, 4 விமானங்கள் புறப்பட்டு சென்றன. பழுது பார்க்கும் பணிக்காக பிரதான ஓடுபாதை இரவு 10.09 மணியளவில் ஒப்படைக்கப்பட்டது. இந்தத் தடை காரணமாக சென்னை விமான நிலையத்துக்கு வந்த எஸ்க்யூ 8028 (பி787) போன்ற பெரிய விமானங்கள் பெங்களூருக்கு இரவு 09.50 மணியளவில் திருப்பி விடப்பட்டன.
ட்ரு ஜெட் விமானம் அவரசரமாக தரையிறங்கிய போது, அசம்பாவிதங்களைத் தவிர்க்க, விமான நிலைய அவசரகால மீட்புக் குழுவினர், தீயணைப்புப் படையினர் ஈடுபடுத்தப்பட்டனர்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.