செய்தியாளர்: ஜெ.அன்பரசன்
ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர்கள் கிருஷ்ணன் (30) - தக்ஷனா தம்பதியர். இவர்களுக்கு ஸ்ருதி (5) மற்றும் ரிஷி (7) ஆகிய இரு பிள்ளைகள் உள்ளனர். கட்டடத் தொழிலாளியான கிருஷ்ணன் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு குடும்பத்துடன் சென்னைக்கு வந்து தங்கி கட்டட வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று மாலை இரு குழந்தைகளும் கட்டடத்திற்கு வெளியே விளையாடி உள்ளனர். அச்சமயத்தில் கிருஷ்ணன் மற்றும் தொழிலாளர்கள் அனைவரும் கட்டட வேலையில் மும்முரமாக இருந்துள்ளனர்.
இதையடுத்து வெளியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி ஸ்ருதியை கிருஷ்ணன் அழைக்க வந்துள்ளார். அப்போது சிறுமி ஸ்ருதி காணாமல் போனதை அடுத்து அதிர்ச்சியடைந்த அவர் அருகில் இருந்த இடத்தில் தேடியுள்ளார். எங்கேயும் சிறுமி இல்லாததால் அந்த வழியாக சென்ற ரோந்து வாகனத்தை மறித்து போலீசாரிடம் சிறுமி காணாமல் போனதை தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து கட்டடம் முழுவதுமாக சிறுமியை தீவிரமாக போலீசார் தேடியபோது, தண்ணீர் தொட்டிக்குள் மயக்க நிலையில் சிறுமி கிடந்தது தெரியவந்துள்ளது. உடனடியாக அவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே சிறுமி இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து வந்த ஏழு கிணறு போலீசார் சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து கட்டட உரிமையாளரான ரூபாராம் சவுத்ரி மற்றும் கட்டட காண்ட்ராக்டர் ஜெய்சங்கர், உதவி காண்ட்ராக்டர் ரவி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.