சென்னை | தூங்கிக் கொண்டிருந்தவர் மீது ஏறி இறங்கிய கார் - சிசிடிவி காட்டிக்கொடுத்த சம்பவம்

சென்னையில் தங்கும் விடுதி பார்க்கிங்கில் படுத்து உறங்கிய முதியவர் மீது கார் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.
இறந்தவர்
இறந்தவர்புதியதலைமுறை
Published on

சென்னையில் தங்கும் விடுதி பார்க்கிங்கில் படுத்து உறங்கிய முதியவர் மீது கார் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.

சென்னை ஆயிரம் விளக்கு மாடல் பள்ளி சாலையை சேர்ந்தவர் பன்னீர் செல்வம்(66). இவரது மனைவி இறந்த நிலையில், இவருடைய நான்கு பிள்ளைகள் பாதுகாப்பில் வசித்து வந்துள்ளார். வயது மூப்பின் காரணமாக பன்னீர் செல்வம் வேலைக்கு செல்லாமல் தினந்தோறும் இரவு நேரத்தில் அங்குள்ள தனியார் தங்கும் விடுதி கார் பார்க்கிங்கில் உறங்குவதை வாடிக்கையாக வைத்திருந்துள்ளார்.

இதேபோல கடந்த 13ஆம் தேதி இரவு பன்னீர் செல்வம் தனியார் தங்கும் விடுதி பார்க்கிங்கில் படுத்து உறங்கியுள்ளார்.

பின்னர், அதிகாலை பன்னீர் செல்வம் இறந்த நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் உடல்நலக்குறைவு காரணமாக இறந்துவிட்டதாக நினைத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்நிலையில் பன்னீர் செல்வத்தின் காதில் ரத்தம் வருவதை கண்ட உறவினர்கள் சந்தேகமடைந்து தங்கும் விடுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, உறவினர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. படுத்து கொண்டிருந்த பன்னீர் செல்வத்தின் மார்பின் மீது காரை ஏற்றிவிட்டு ஒருவர் தப்பிச்சென்றிருப்பது தெரியவந்துள்ளது.

இரவு உணவை சாப்பிட்டுவிட்டு வழக்கமாக உறங்கக்கூடிய இடத்தில் பன்னீர் செல்வம் உறங்கிய போது விபத்து ஏற்பட்டதாகவும், பிரேத பரிசோதனையின் போது மார்பில் கார் டயர் அச்சு இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்ததாக பன்னீர் செல்வத்தின் உறவினர்கள் தெரிவித்தனர்.

ஏற்றிவிட்டு மனசாட்சியே இல்லாமல் செல்லும் அந்த நபரை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தாய் இறந்த பின்பு எங்களை பார்த்து கொண்ட தந்தையான பன்னீர் செல்வம் தற்போது இல்லை, தங்களது குடும்பத்திற்கு அரசு ஏதாவது உதவி புரிய வேண்டும் என வேண்டுகோள் வைத்தார்.

இதையடுத்து பன்னீர் செல்வத்தின் மகள் வனரோஜா பாண்டிபஜார் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் அஜாக்கிரதையாக வாகனத்தை ஓட்டி மரணத்தை ஏற்படுத்துதல் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்துள்ளனர். காரை ஏற்றி விட்டு தபியோடிய அந்த நபரை காரின் பதிவெண்ணை வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com