சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவர் நேற்று மாலை பிராட்வே பகுதியில், நண்பர்களுடன் சேர்ந்து போதை ஊசி எடுத்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது. போதை ஊசி எடுத்துக்கொண்ட சிறிது நேரத்தில் அச்சிறுவன் மயங்கி விழுந்துள்ளார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த மற்ற நண்பர்கள் அவரை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அச்சிறுவன் உயிரிழந்துள்ளார்.
மருத்துவமனையில் சிறுவனை பரிசோதித்த மருத்துவர், சிறுவன் போதை ஊசி எடுத்துக்கொண்டதால் உயிரிழந்துள்ளார் என்று தெரியவந்த நிலையில், இதுகுறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக ஸ்டான்லி மருத்துவமனைக்கு வந்த காவல்துறையினர், இறந்த மாணவரை பரிசோதனை செய்ததில், அவரது பாக்கெட்டில் போதை மருந்து, ஊசி போன்றவை இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
சிறுவனுக்கு போதை ஊசியை கொடுத்து யார்? எப்படி இவர்களுக்கு சுலபமாக போதைமருந்து கிடைக்கிறது? என்பது குறித்து காவல் துறையினர் சென்னை முழுவதும் முழுவீச்சில் சோதனை மற்றும் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதுகுறித்து மனநலமருத்துவர் ஷர்மியா ஜெயக்குமார் அவர்கள் இதுகுறித்து பேசும்பொழுது, ”கடந்த மூன்று ஆண்டுகளாகவே குழந்தைகள் போதைக்கு அடிமையாகி வருவது அதிகரித்து வருகிறது. எனது அனுபவத்தில் 9 வயது குழந்தைகூட போதைக்கு அடிமையானதை நான் பார்த்துள்ளேன். சாதாரண சிறு போதைப்பொருட்களிலிருந்து, போதை ஊசிவரை இவர்கள் பயன்படுதுகிறார்கள். முக்கியமாக வடசென்னை சிறுவர்கள் போதைபழக்கத்திற்கு அதிகம் அடிமையாகி வருகின்றனர். போதை ஊசி போட்டுக்கொண்டால் சுறுசுறுப்பாகவும், அதிக எனர்ஜியுடன் இருக்கலாம் என்று அவர்கள் நினைக்கின்றனர். அது முற்றிலும் தவறு. போதை பழக்கத்திற்கு ஆளாகும் சிறுவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக அப்நார்மலாக மாறிவருவர்கள். இது அவர்களுக்கே தெரியாது என்பதுதான் வருந்ததக்கசெய்தி.
ஏழ்மைநிலையில் இருக்கும் பெற்றோர்கள் பலருக்கும் தங்களது குழந்தைகள் என்ன செய்கிறார்கள் என்றே தெரிந்துக்கொள்ள முற்படுவதில்லை. காரணம் பணத்திற்காக சிறுவர்கள் வேலைக்கு அனுப்பும் பொழுது அவர்களின் கைகளில் கிடைக்கும் பணத்தில் இத்தகைய பழக்கத்திற்கு அவர்கள் சுலபமாக ஆளாகின்றனர்.
ஆகவே... பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளுக்கு அவர்களின் வயதுக்கேத்த நட்பு இருக்கிறதா என்பதை கவனிக்கவேண்டும்.
மேலும், குழந்தைகள் படிப்பில் ஆர்வமின்மையாகவும், தூய்மையின்மையாகவும், (குளிக்காமல் பல் துலக்காமல்,) இருந்தால், அவர்களை கவனித்து மனநலமருத்துவரிடம் அழைத்துச்சென்று அவர்களுக்கு ஆலோசனை வழங்கவேண்டும். சமீபகாலத்தில் ஆண்குழந்தைகள் மட்டுமல்ல பெண்குழந்தைகளும் போதை பழக்கத்திற்கு அடிமையாகிவருவது அதிகரித்து வருகிறது.” என்று கூறினார்.