எட்டாவது மாடியிலிருந்து விழுந்த ஐடி பெண் ஊழியர் உயிரிழப்பு: காரணம் என்ன? 

எட்டாவது மாடியிலிருந்து விழுந்த ஐடி பெண் ஊழியர் உயிரிழப்பு: காரணம் என்ன? 
எட்டாவது மாடியிலிருந்து விழுந்த ஐடி பெண் ஊழியர் உயிரிழப்பு: காரணம் என்ன? 
Published on

அம்பத்தூர் தொழிற்பேட்டையில் இயங்கி வரும் ஐடி நிறுவன வளாகத்தின் 8வது மாடியிலிருந்து விழுந்து ஐ.டி பெண் ஊழியர் உயிரிழந்துள்ளார்.

அம்பத்தூர் தொழிற்பேட்டையில் ஆம்பிட் ஐடி பூங்கா சாலையில் உள்ள 11மாடி கட்டடத்தில் ஐ.டி நிறுவனங்கள் இயங்கி வருகிறது. இந்தக் கட்டடத்தில் உள்ள ஒரு தனியார் ஐ.டி நிறுவனத்தில் திருச்சி அமலாபுரி காலனியை சேர்ந்த டெனிடா ஜூலியஸ் (24) என்பவர் கடந்த 18ந்தேதி வேலைக்காக இண்டர்வியூக்கு வந்துள்ளார். பின்னர், அன்றைய தினமே அவர் நிறுவனத்தில் வேலைக்கு தேர்வாகியுள்ளார். 

இவர், சென்னை, தி.நகரில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்தார். சென்னையில் பி.ஏ (ஆங்கிலம்) பட்டப்படிப்பை முடித்த ஜூலியஸ், தொடக்கத்தில் வடபழனியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றினார். பின்னர், அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள புதிய நிறுவனத்திற்கு பணியில் சேர்ந்தார். 

இரவு பணி முடிந்து நிறுவனத்திலிருந்து வீட்டுக்கு புறப்பட்ட ஜூலியஸ், லிப்ட் வழியாக செல்லாமல் படிக்கட்டு வழியாக 8வது மாடிக்கு சென்றுள்ளார். அப்போது, அவர் 8வது மாடியில் இருந்து திடீரென தவறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. இதில், தலையில் பலத்த காயம் ஏற்பட்டு தரைதளத்தில் டெனிடா ஜூலியஸ் பரிதாபமாக இறந்தார். 

தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் விஜயராகவன் தலைமையில் போலீசார் விரைந்து வந்தனர். பின்னர், போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஐடி நிறுவன அதிகாரிகள், ஊழியர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். 

இதற்கிடையில், திருச்சியில் இருந்து டெனிடா ஜூலியஸ் பெற்றோர் அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்திற்கு இன்று காலை வந்தனர். இதனை அடுத்து, போலீசார் அவர்களிடம் ஜூலியஸ் இறப்பு குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், ‘சற்று உடல் பருமனாக இருக்கும் ஜூலியஸ், அடிக்கடி மாரத்தான் ஓட்டத்தில் கலந்து கொண்டும், பல்வேறு உடற்பயிற்சிகளையும் செய்துவந்தார். வேலை செய்யும் நிறுவனத்தில் கூட லிப்டை தவிர்த்து படிக்கட்டுகளைதான் பயன்படுத்துவாராம்.

அதேபோல், நேற்றும் வேலை முடிந்த பிறகு படிக்கட்டு வழியாக நடைப்பயிற்சியை மேற்கொண்டு உள்ளார். அப்போது, அவர் 8வது மாடி சென்று விட்டு மீண்டும் படிக்கட்டு வழியாக கீழே இறங்கி வந்து கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென்று படிக்கட்டில் இருந்து தவறி கீழே விழுந்து பரிதாபமாக இறந்துள்ளார்’ என்ற தகவல் வெளியானதாக கூறப்படுகிறது.

இருப்பினும், ஜூலியஸ் விபத்து வேறு ஏதேனும் மர்மம் உள்ளதா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தவறி விழுந்து இறந்தாரா? தற்கொலையா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என பல கோணங்களில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். அம்பத்தூர் தொழிற்பேட்டையில் ஐடி பெண் ஊழியர் 8வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலியான சம்பவம் சக ஊழியர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com