பொதுமுடக்கத்தை மதிக்காமல் சென்னையில் சாலைகளில் சுற்றித் திரியும் வாகன ஓட்டிகள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கொரோனா இரண்டாவது அலை தமிழகம் முழுவதும் வேகமாக பரவி வரும் நிலையில் பொதுமுடக்கம் 24ம் தேதி வரை தமிழக அரசு சார்பில் அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் விநியோகம், மருத்துவ சேவைகள் மட்டும் தொடர்ந்து இயங்கும் என்றும் மற்றவை மதியம் 12 மணிக்கு மேல் இயங்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னையில் பல்வேறு பகுதிகளில் மதியம், மாலை நேரங்களில் வாகன ஓட்டிகள் பயணித்தனர். ஆம்புலன்ஸ், காவல்துறை, ஊடகம் போன்ற முன் கள பணியாளர்களை தாண்டி, பொதுமக்கள் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் பயணித்தனர். பலர் நடைபயிற்சி, மிதிவண்டி பயிற்சி செய்ததையும் சாலைகளில் பார்க்க முடிந்தது.
அண்ணா சாலை, ஈ. வே.ரா பெரியார் சாலை, காமராஜர் சாலை, ராஜிவ் காந்தி சாலை, ஜி.எஸ்.டி சாலை போன்ற சென்னையின் முக்கிய சாலைகளில் வாகன போக்குவரத்து அதிகமாக இருந்தது. கடந்த ஆண்டு பொதுமுடக்கத்தின்போது, காவல்துறையினர், பொதுமக்கள் நடமாட்டத்தை தடுக்க வாகன பறிமுதல், அபராதம் உள்ளிட்ட சில நடவடிக்கைகளை மேற்கொண்டனர். தற்போது டி.ஜி.பி, பொது மக்களிடம் காவல்துறையினர் கனிவோடு நடந்து கொள்ள வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் காவல்துறையினர் தணிக்கை குறைவாக இருப்பதால் மக்கள் பயமின்றி வெளியே சுற்றித் திரிகின்றனர். எனவே தற்போது பரவி வரும் பெருந்தொற்றை கருத்தில் கொண்டு மக்கள் அவசியமற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும் என்றும் அரசும் கண்காணிக்க வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.