தவறாக எச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்ட சிறுவனுக்கு 20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

தவறாக எச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்ட சிறுவனுக்கு 20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
தவறாக எச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்ட சிறுவனுக்கு 20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
Published on

எச்.ஐ.வி தொற்று பாதித்த ரத்தத்தை சிறுவனுக்கு ஏற்றிய விவகாரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க எழும்பூர் குழந்தைகள் நல ‌மருத்துவமனைக்கு சென்னை மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தினக்கூலி வேலை செய்யும் பெண்ணுக்கு 1998-ல் பிறந்த ஆண் குழந்தைக்கு ஒரு வயதில் வயிற்றுப்போக்கு ஏற்பட்டதால் சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் 1999 பிப்ரவரியில் அனுமதித்துள்ளனர். அப்போது, குழந்தைக்கு சிறுகுடல், பெருகுடல் இரண்டும் சிக்கியதாக கூறி, அறுவை சிகிச்சை செய்து பின்னர் ரத்தம் ஏற்றியுள்ளனர்.

வீடு திரும்பிய குழந்தைக்கு தீவிர சளி மற்றும் கழுத்தில் வீக்கம் இருந்ததால் தாம்பரம் சானிடோரிய மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது ரத்தத்தில் எச்.ஐ.வி. தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. எழும்பூர் மருத்துவமனையில் ஏற்றப்பட்ட ரத்தத்தால் மன உளைச்சலுக்கு ஆளான பெற்றோர் 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிடக் கோரி சென்னை மாவட்ட 17-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ரத்தத்தை பரிசோதித்து ஏற்றியதாகவும், ஆனால் 5 ஆண்டுகளுக்குப் பிறகு அதற்கான ஆவணங்களை அழித்துவிட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், அரசு மருத்துவமனையில் பணியாற்றும் டாக்டர்கள் கடமையை உணர்ந்து அரசு மருத்துவமனையை நம்பி உள்ள ஏழை மக்களுக்கு முறையான சிகிச்சை வழங்க வேண்டும் எனவும், தவறினால் அது டாக்டர்களின் கவன குறைவாகவே கருதப்படும் எனத் தெரிவித்துள்ளார். மேலும், அரசு மருத்துவனைகளில் தகுதியான ஊழியர்கள் இல்லாததும், முறையாக பராமரிக்கப்படாத மருத்துவ உபகரணங்களால்தான் பொதுமக்கள் தனியார் மருத்துவமனைக்கு செல்வதாக குறிப்பிட்டார்.

இந்த வழக்கை பொறுத்தவரை மருத்துவமனையில் இருந்தவர்களின் கவன குறைவால் எச்.ஐ.வி., பாதிப்பு ரத்தம் ஏற்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்ட குழந்தைக்கு இழப்பீடாக 20 லட்சம் ரூபாயை வழங்க எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு உத்தரவிட்டார். 2016-ஆம் ஆண்டு வழக்குத் தொடரப்பட்ட நாளிலிருந்து 6 சதவீத வட்டியுடன் சேர்த்து வழங்க உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு செலவாக குழந்தையின் பெற்றோருக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயும் அளிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் குழந்தைக்கு இலவச மருந்துகள் கொடுப்பது மட்டுமே போதாது எனத் தெரிவித்துள்ள நீதிபதி, இந்த விவகாரத்தை சிறப்பு வழக்காக கருதி பாதிக்கப்பட்டவரின் தந்தை டிப்ளமோ படித்திருப்பதால் அரசு வேலை வழங்குவதற்கு பரிசீலிக்க வேண்டுமென பரிந்துரைத்துள்ளார். மேலும் இந்த உத்தரவு நகலை தலைமைச் செயலாளருக்கும், சுகாதாரத்துறைச் செயலாளருக்கும் அனுப்பவும் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com