செங்கல்பட்டில் கொரோனா தடுப்பூசி தயாரிப்புப் பணிகளை மேற்கொள்ள பாரத் பயோடெக் நிறுவனத்திற்கு அனுமதி கிடைக்க அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
செங்கல்பட்டில், 700 கோடி ரூபாய் செலவில் ஆண்டு தோறும் 585 லட்சம் டோஸ்கள் தடுப்பூசி தயாரிக்கத் தேவையான கட்டமைப்புகளுடன் கூடிய வளாகம் கடந்த 2017ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. இதனைப் பயன்பாட்டுக்கு கொண்டு வர தமிழக அரசு தொடர்ந்து முயன்று வருகிறது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் எல்.மாண்டவியாவை நாளை டெல்லியில் தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சந்தித்துப் பேச உள்ளார்.
அப்போது செங்கல்பட்டு தடுப்பூசி வளாகம் தொடர்பாக மா.சுப்பிரமணியன் வலியுறுத்துவார் என மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மூன்று நிறுவனங்கள் செங்கல்பட்டு வளாகத்தில் தடுப்பூசி தயாரிப்பில் ஈடுபட தயாராக இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதில் கோவாக்சின் தடுப்பூசி தயாரிப்பில் ஈடுபட்டு வரும் பாரத் பயோடெக் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட அதிக வாய்ப்புள்ளதாகவும், இது தொடர்பாக மத்திய, மாநில அமைச்சர்களின் சந்திப்பின்போது இறுதி செய்யப்படும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.