செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கச்சாவடி பகுதியில் ஆபத்தான முறையில் பைக் வீலிங் செய்து இன்ஸ்டாகிராமில் பதிவேற்றி வந்த இளைஞரின் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.
இந்த நிலையில் (Duku_Gokul) என்கிற பெயரில் செயல்பட்டு வந்த இன்ஸ்டாகிராம் கணக்கில் ஆபத்தான முறையில் பைக் ஸ்டண்ட்டுகள் செய்தும், பைக் வீலிங் செய்தும், இரண்டு கைகளையும் விட்டபடி வாகனத்தை இயக்கி செல்வது என பல்வேறு வீடியோக்களை பதிவிட்டுள்ளார் கோகுல் என்ற இளைஞர். இந்த நிலையில், வீடியோக்களை வைத்து, கோகுலை தேடி வந்த போலீஸார் அவரை கைது செய்தனர்.
இவர் செங்கல்பட்டு சுங்கச்சாவடி மற்றும் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை, சிங்கப்பெருமாள் கோவில் - மீஞ்சூர் வெளிவட்ட சாலை பகுதிகளில் பொதுமக்களுக்கு ஆபத்து மற்றும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதும் தெரியவந்துள்ளது. இந்த விவகாரத்தில் கோகுலின் YAMAHA MT என்ற இருசக்கர வாகனத்தையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், கைது செய்யப்பட்ட கோகுலிடம் ஓட்டுனர் உரிமம் இல்லை என்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த செங்கல்பட்டு தாலுகா போலீசார், அவரை செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். தொடர்ந்து அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை முடக்கவும் திட்டமிட்டுள்ளனர். மேலும் இதுபோன்று பைக் சாகசங்கள் செய்யும் இளைஞர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு, ஓட்டுனர் உரிமம் ரத்து செய்ய பரிந்துரைக்கப்படும் என செங்கல்பட்டு மாவட்ட காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.