அவசர சிகிச்சை பிரிவு கட்டிடத்தில் செயல்படாமல் இருக்கும் லிப்ட்கள்.. செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தொடரும் அவல நிலை...
செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பிரதான மருத்துவமனையாக உள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மட்டுமில்லாமல் காஞ்சிபுரம், திருவண்ணாமலை , விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த நோயாளிகள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரகின்றர். நாள்தோறும் ஆயிரக்கணக்கான உள் நோயாளிகள் மற்றும் புறநோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில், எப்போதும் ஏராளமான நோயாளிகள் சிகிச்சை பெறுவது வழக்கமாக உள்ளது. செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவு, மேம்படுத்தப்பட்ட தீவிர சிகிச்சை பிரிவு, அம்மா வார்டுகள் ஆகியவை ஒரே கட்டிடத்தில் செயல்பட்டு வருகின்றன.
மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெறும் நோயாளிகள், சக்கர நாற்காலி, தூக்கு படுக்கை (ஸ்ட்ரெச்சர்) மூலம் அழைத்துச் செல்லப்படுவது வழக்கமாக உள்ளது. மேலும் மேம்படுத்த தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெறுபவர்கள் கீழே வருவதற்கு மூன்று லிப்ட்டுகள் உள்ளன. ஆனால் அவற்றில் ஒரு லிஃப்ட் மட்டுமே செயல் படுகிறது. மீதமுள்ள இரண்டு லிப்ட்டுகளும், செயல்படாமல் இருப்பதால் நோயாளிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.
சக்கர நாற்காலியில் இருந்து கீழே செல்ல முடியாது என்பதால், ஒரே லிப்ட் காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே நோயாளிகள் தவிர பிறர் லிப்டை பயன்படுத்த முடியாத சூழலும் உள்ளதால் வயதானவர்கள் கூட படிக்கட்டில் ஏறி வரவேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு முறையும் மேலிருந்து கீழே சென்று வர, சக்கர நாற்காலி மற்றும் ஸ்ட்ரக்சர் ஆகியவற்றில் லிஃப்ட் வாசலில் நீண்ட நேரம் நோயாளிகள் காத்துக் கிடக்கும் காட்சிகள் அதிர்ச்சி ஏற்படுத்தி வருகின்றன.
இதுகுறித்து மருத்துவமனை முதல்வர் பொறுப்பு மருத்துவர் ஜோதி குமாரிடம் கேட்டதற்கு இங்கு உள்ள இரண்டு மின் தூக்கிகளும் பழுதாகி உள்ளது இது புதிதாக மாற்ற கோரி அரசுக்கு திட்ட அறிக்கை தயாரித்து அளித்துள்ளதாகவும் விரைவில் புதிய லிப்ட் அமைக்கப்படும் என தெரிவித்தார்.