செங்கல்பட்டு: கட்டி முடிக்கப்பட்டு 12 ஆண்டுகளாக திறக்கப்படாத நியாய விலை கடை - மக்கள் வேதனை

செங்கல்பட்டு: கட்டி முடிக்கப்பட்டு 12 ஆண்டுகளாக திறக்கப்படாத நியாய விலை கடை - மக்கள் வேதனை
செங்கல்பட்டு: கட்டி முடிக்கப்பட்டு 12 ஆண்டுகளாக திறக்கப்படாத நியாய விலை கடை - மக்கள் வேதனை
Published on

12 ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட நியாய விலை கடை இன்று வரை திறக்கப்படாததால் மூன்று கிலோமீட்டர் வரை நடந்து சென்று நியாயவிலைக் கடைகளில் பொருட்களை பெற்று வரும் அவலத்துக்கு உள்ளாகியுள்ளனர் செங்கல்பட்டை சேர்ந்த ஒரு கிராம மக்கள்.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் சட்டமன்ற தொகுதியிலுள்ள திருக்கழுக்குன்றம் ஒன்றியத்தைச் சேர்ந்த செல்வி நகர் பகுதியில், கடந்த 2006 ஆம் ஆண்டு தமிழக அரசின் பொது நிதியிலிருந்து புதிய நியாயவிலை கட்டடம் கட்டப்பட்டிருந்தது. இது 2008ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. ஆனால் இன்று வரை அக்கட்டடம் திறக்கப்படாததால் தற்பொழுது வாடகை கட்டடத்தில் அப்பகுதிக்கான நியாயவிலை கடை இயங்கி வருகிறது. அந்த வாடகை இடம், கிராமத்திலிருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவிலிருக்கிறது. இதனால் ஒவ்வொருமுறையும் 3 கி.மீ. நடந்து சென்று பொருட்களை பெற்று வருகிறார்கள் அக்கிராம மக்கள்.

திறக்கப்படாத இந்த பொது நியாயவிலை கடையை திறக்கும்படி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கும், தற்போது செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியருக்கும் பல முறை மனுக்கள் அளித்தும், அதிகாரிகள் ஆய்வு என்ற பெயரில் வந்து செல்வது மட்டுமே வாடிக்கையாக உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

நியாவிலை கடையானது இன்றுவரை திறக்கப்படாமல் பாழடைந்து இருப்பதால், அருகிலுள்ள நியாயவிலை கடைகளில் பொருட்கள் வாங்குவது மிகவும் சிரமமாக உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், “பல்வேறு அதிகாரிகளிடம் புகார் அளித்தும் திமுக ஆட்சியில் கட்டப்பட்ட கட்டடம் என்பதால் இதுவரை திறக்கப்படாமல் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்தது. இனியாவது பிரச்னை சரிசெய்யப்பட்டு, அக்கட்டடம் திறக்கப்பட வேண்டும். அதுவே எங்கள் கோரிக்கை. கடந்த இரண்டு மாதங்களாக, அருகில் உள்ள கிராமங்களுக்கு சென்று நியாயவிலை பொருட்கள் வாங்குவதை நிறுத்திக் கொண்டுள்ளோம். எங்களது ஊரில் அமைக்கப்பட்டுள்ள நியாய விலை கடை திறக்கும் வரையில் வேறு எங்கும் பொருட்கள் வாங்கும் திட்டமில்லை” எனத் தெரிவித்தனர்.

தங்களது கோரிக்கையை ஏற்று தமிழக அரசு நியாயவிலைக் கடையை திறக்காவிட்டால், தங்களுடைய ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் தங்களது ரேஷன் அட்டைகளை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்து விட்டு போராட்டங்களை கையில் எடுக்கப்போவதாக அப்பகுதி கிராம மக்கள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com