செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு குறித்து மக்கள் தேவையில்லாமல் அச்சம் கொள்ளத்தேவையில்லை என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.
செம்பரம்பாக்கம் ஏரிக்கு பூண்டி ஏரியிலிருந்து நீர் வருவது வழக்கம். தற்போது அங்கு நீர்மட்டம் உயர்ந்ததை அடுத்து, பூண்டி ஏரியில் இருந்து வரும் நீரானது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தொடர்மழையின் காரணமாக 24 அடி உயரம் கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியானது 20 அடிக்குமேல் உயர்ந்துள்ளது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரியிலுள்ள நீரானது எப்போது வேண்டுமானலும் திறந்து விடப்படுமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் பரவி வருகிறது. இந்நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியை ஆய்வு செய்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் தற்போதைக்கு செம்பரம்பாக்கம் ஏரியில் உள்ள நீரை திறந்து விட வாய்ப்பில்லை என்று கூறியுள்ளனர்.
இந்நிலையில் இது குறித்தான விவரங்களை தெரிந்துகொள்ள தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜானை தொடர்பு கொண்டு பேசினோம். அவர் கூறும்போது “ ஏரியின் கொள்ளளவு தற்போது 2.6 டி.எம்.சியாக உள்ளது. ஆனால் ஏரியின் மொத்தக் கொள்ளளவு 3.6 டி.எம்சி ஆகும். ஆகவே ஏரியின் கொள்ளளவு 80 சதவீதமாக மட்டுமே நிரம்பியுள்ளது. வருகின்ற 24 ஆம் தேதி வரை ஆங்காங்கே விட்டு விட்டு மட்டுமே மழை பெய்யக்கூடும். 25-ஆம் தேதிக்குப் பிறகு கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. அப்போதைய நிலவரத்தைப் பொறுத்து மழையானது எந்த இடங்களில் அதிகமாக பெய்யும் என்பது குறித்தான விவரங்கள் வெளியிடப்படும்.
இன்னொரு விஷயம் என்னெவென்றால் ஏரி திறந்து விடப்பட்டாலே வெள்ளம் என நினைக்கக்கூடாது. அடையாறு நதியானது ஓரளவு பெரிய நதி. அதில் 10,000 கன அடி சென்றாலும் கூட மக்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. 2015-க்கும் பின் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஆகையால் தற்போதைக்கு மக்கள் தேவையில்லாமல் அச்சம் கொள்ளத்தேவையில்லை” என்றார்.
-கல்யாணி பாண்டியன்