சிறையில் கைதிகளை அடித்து துன்புறுத்துவதாக கடலூர் சிறை கண்காணிப்பாளர் செந்தில் குமார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
சவுக்கு சங்கர் தாக்கல் செய்துள்ள அந்த மனுவில், `நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது, தனிமைச் சிறையில் இருந்த ஒன்பது கைதிகள் மீது சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தாக்குதல் நடத்தினார்’ எனக் குறிப்பிட்டுள்ளார். இதில் பாதிப்புக்குள்ளான அந்த 9 பேரையும் பொது சிறைக்கு மாற்றக் கோரியும், சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் உள்துறை செயலாளரிடம் தான் மனு அளித்ததாகவும், அந்த மனு மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால், மனுவை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டுமென்று நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதி ஜி.சந்திரசேகரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, `தமிழ்நாடு மாநில சட்ட பணிகள் ஆணைக் குழு மற்றும் சமந்தப்பட்ட மாவட்ட நீதிபதிகள் அல்லது மாஜிஸ்திரேட்டுகளால் சிறைகளில் அவ்வப்போது ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் நிலையில், இந்த குற்றச்சாட்டுகளுக்கு என்ன ஆதாரம் இருக்கிறது?’ என கேள்வி எழுப்பினார்.
அப்போது அரசு தரப்பில், `பாதிக்கப்பட்ட நபர்களால் அல்லாமல் மூன்றாம் நபரால் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பொதுநல வழக்கு வேண்டுமானால் தாக்கல் செய்யலாம்’ என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதி, மனு குறித்து தமிழக அரசு ஒரு வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தள்ளிவைத்தார்.