செய்தியாளர்: மணிசங்கர்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள வேல்ஸ் வித்யாலயா பள்ளி ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டார். கல்வி மற்றும் விளையாட்டுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களை பாராட்டி பரிசுகள் வழங்கிய பின்னர் அவர் பேசுகையில்...
நிலாவில் ஆம்ஸ்ட்ராங் முதலில் இறங்கி இருக்கலாம். ஆனால், நிலவில் நீர் இருக்கிறது என்பதை சொன்னது நாம் தான். நிலவின் தென் துருவத்தில் மெதுவாக இறங்க முடியும் என்று நிரூபித்தவர்கள் நாம். முதல் முயற்சியில் செவ்வாய் கிரகத்தை அடைந்தவர்கள் நாம். நிலாவில் சர்வதேச விண்வெளி மையம் அமைப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. அதற்கான திறன் நமக்கு இருக்கிறது. என்ன கற்றுக் கொள்கிறோம் என்பதை விட எப்படி கற்றுக் கொள்கிறோம் என்பதை சரியாக புரிந்து கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு சுதந்திர தினத்தின் போதும் இந்திய மூவர்ணக் கொடியை ஏற்றி அதற்கு மரியாதை செலுத்தும் போது நம்முடைய தேசியக் கொடி மேலே உயர்த்த நாம் செயல்பட வேண்டும் என்பதை குழந்தைகள் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும், நிலா மற்றும் செவ்வாயில் இந்திய தேசியக் கொடியை நிலை நிறுத்துவதற்கான வாய்ப்பினை நான் உருவாக்க வேண்டும் என்று குழந்தைகள் நினைக்க வேண்டும் என்று பேசினார்.