வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் சேலம், கரூர், கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உள் மாவட்டங்களில் மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் ஆகிய இடங்களில் லேசான மழையும் பெய்ய வாய்ப்பிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகரில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது. அரபிக்கடலில் 40 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை 2 புள்ளி 9 மீட்டர் உயரத்துக்கு கடல் அலைகள் எழும்பக்கூடும் என்பதால் மீனவர்கள் அங்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.