அடுத்த 12 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் செங்கல்பட்டு, கடலூர், புதுச்சேரி, விழுப்புரம் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஹேமச்சந்திரன் தொலைபேசி மூலமாக அளித்த பேட்டியில், “தற்போது தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்று சுழற்சி நிலவுகிறது. இந்த காற்று சுழற்சி அடுத்த 12 மணி நேரம் முதல் 18 மணி நேரத்திற்குள் காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி தொடர்ந்து மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து நவம்பர் 12 ஆம் தேதி நன்கமைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக டெல்டா கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது நவம்பர் 12, 13 ஆகிய தேதிகளில் அதே இடத்தில் நிலைகொண்டு தமிழகத்திற்கு மழையைக் கொடுக்க வாய்ப்பு இருக்கிறது. இதன் விளைவாக நாளை மாலை அல்லது இரவு முதல் சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மழையின் தாக்கம் படிப்படியாக உயரும்.
நவம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் சென்னை முதல் நாகை வரையிலான, வடகடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் பரவலாக கனமழையும், ஒரு சில இடங்களில் மிக கனமழையும் எதிர்பார்க்கலாம். இந்த தாழ்வுப்பகுதி நன்கு அமைந்த தாழ்வுப்பகுதியாக அதே இடத்தில் மையம் கொண்டு மழையைக் கொடுக்கும் காரணத்தினால் நவம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் கடலோரத்தில் ஓரிரு பகுதிகளில் அதீத கனமழைக்கும் வாய்ப்பு இருக்கிறது.
அதே வேளையில் இந்த கனமழை பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய மழையாக இருக்காது. ஒருசில மணி நேரத்தில் பலத்த மழை பெய்யும் போது தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்குவதும், போக்குவரத்து இடையூறு ஏற்படுவதும் இயல்பாக இருக்கும். ஆனால், மழை குறைந்துவிடும்” என தெரிவித்துள்ளார்.