கஞ்சா பயன்படுத்துவது ஒன்றும் நமது கலாச்சாரத்துக்கு புதிதல்ல. போதைப் பொருள் பயன்படுத்துவர்களை நோயாளிகளாக பார்க்க வேண்டும் என கார்த்திக் சிதம்பரம் எம்.பி. தெரிவித்தார்.
ராகுல்காந்தி மேற்கொண்டு வரும் தேசிய ஒற்றுமை பயணம் 100 நாட்களை கடந்து வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. அதை கொண்டாடும் விதமாக சிவகங்கையில் காங்கிரஸ் கொடியை ஏற்றிவைத்த கார்த்திக் சிதம்பரம் எம்பி பொதுமக்களுக்க இனிப்புகளை வழங்கினார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசும்போது... போதைப் பொருள் பயன்படுத்துவர்களை நோயாளிகளாக பார்க்க வேண்டும். போதைப் பொருள் பயன்படுத்துபவர்களை விட, அதை உற்பத்தி மற்றும் விற்பனை செய்யவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். கஞ்சா பயன்படுத்துவது நமது கலாச்சாரத்துக்கு புதியது அல்ல.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியில் கமல்ஹாசன் இடம்பெற பிரகாசமான வாய்ப்புள்ளது. தமிழக அரசு பொங்கல் பரிசாக செங்கரும்பை தமிழக மக்களுக்கு விநியோகிக்க வேண்டும். மதுரை எய்ம்ஸ்க்கு நிதி ஒதுக்கியும், செயல்படவில்லை. எய்ம்ஸ் வளாகத்தில் படிக்காமல், ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் 5 ஆண்டு காலம் படிப்பை முடிப்பவர்களுக்கு எய்ம்ஸில் படித்ததாக சான்றிதழ் வழங்கப்படும் அவல நிலை உள்ளது. இது குறித்து மத்திய அரசிற்கு கடிதம் எழுதவுள்ளேன்.
ராகுல் காந்தி மேற்கொள்ளும் தேசிய ஒற்றுமை பயணம் டெல்லி செல்ல ஒருநாள் உள்ள நிலையில், கொரோனா பரவல் குறித்து மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது. இதில், அரசியல் உள்நோக்கம் உள்ளதாக எங்களுக்கு தோன்றுகிறது என்றார்.