இன்றும், நாளையும் தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

இன்றும், நாளையும் தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
இன்றும், நாளையும் தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
Published on

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்றும், நாளையும் திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை, சேலம், நாமக்கல், கோயம்புத்தூர், கன்னியாகுமரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தென் தமிழக பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று ( டிசம்பர் - 4) திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை, சேலம், நாமக்கல், கோயம்புத்தூர், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

டிசம்பர் 5 ஆம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, மதுரை, தென்காசி, திருச்சிராப்பள்ளி, சேலம், நாமக்கல், கோயம்புத்தூர், ஈரோடு, தர்மபுரி, திருவண்ணாமலை, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

டிசம்பர் 6ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். டிசம்பர் 7ஆம் தேதி தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

டிசம்பர் 8 ஆம் தேதியன்று  தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், ஏனைய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு. வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

வங்கக் கடல் பகுதிகள் மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் புயல் அடுத்த 12 மணி நேரத்தில் வலுவிழந்து தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக ஒரிசா கடற்கரையோரம் நிலைகொள்ளும். இதன் காரணமாக டிசம்பர் 4 மற்றும் 5 ஆம் தேதிகளில் மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதி, வடக்கு ஆந்திரா மற்றும் ஒரிசா கடலோர பகுதிகளில் புயல் காற்று மணிக்கு 50 முதல் 70  கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 70 முதல் 80  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே, மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com