வங்கக்கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணிநேரத்தில் ஆழ்ந்த காற்றுழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று கூறப்பட்டுள்ளது. இது அடுத்த 48 மணிநேரத்தில் இலங்கை மற்றும் தமிழ்நாடு கடற்கரை நோக்கி நகரக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் அடுத்த 24 மணிநேரத்தில் தமிழக கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் மார்ச் 5 மற்றும் 6-ம் தேதி தமிழ்நாட்டின் டெல்டா உட்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அங்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.