தமிழகத்தின் உள்மாவட்டங்களில் வரும் வாரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் வாட்டி வருகிறது. காலை 10 மணிக்கெல்லாம் தொடங்கிவிடும் வெயில் கிட்டத்தட்ட மாலை 6 மணி வரை விடாமல் கொளுத்துகிறது. இதனால் மக்கள் அவதியுற்று வருகின்றனர். கோடை மழை பெய்யாதா.? என ஏங்கிக் கிடக்கின்றனர்.
இந்நிலையில் தமிழகத்தின் உள்மாவட்டங்களில் வரும் வாரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசியுள்ள அவர், “ சென்னையை பொறுத்தவரை வரும் வாரத்தில் தற்போது நிலவும் வெப்பநிலையே நிலவும். அதேசமயம் உள்மாவட்டங்களான வேலூர், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் வரும் வாரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யும். மேற்கிலிருந்து வரும் காற்றும் கிழக்கிலிருந்து வரும் காற்றும் ஒன்றுக்கொன்று மோதுவதால் உள்மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது” என தெரிவித்துள்ளார்.