வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் பேசும்போது, அக்டோபரில் மிகவும் குறைவாகவே மழை பெய்துள்ளது. வழக்கமாக அக்டோபர் மாத இறுதியில் இருந்தே வேகமெடுக்கக்கூடிய மழை, இப்போதுதான் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது.
கடலில் இருந்து நிலப்பகுதிக்கு வரும் காற்றின் வெப்பநிலை, நிலப்பகுதியில் உள்ள வெப்பநிலை வேறுபாடு காரணமாக சென்னை உள்ளிட்ட கடலோர பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அதிக மழை பொழிவை ஏற்படுத்தும் காரணிகள் இல்லை என்றாலும், பரவலாக பருவமழை பெய்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். தற்போது தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி நிலவுவதாகவும், இதனால் அடுத்த 3 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
சென்னையில் மழை தொடர்ந்து விட்டுவிட்டு பெய்யும். அவ்வப்போது பலத்த மழை பெய்யவும் வாய்ப்புள்ளது என்று கூறும் வானிலை ஆய்வு மையம், இந்தநிலை வரும் ஆறாம் தேதி வரை தொடரும் என்று கூறியுள்ளது.
இதையும் படிக்க: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு.. தமிழக அரசிடம் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
மேலும், எல் நினோ தாக்கம் உள்ளிட்ட காரணங்களால் இந்த ஆண்டு தமிழ்நாட்டின் சில பகுதிகளில் அதிக மழைப் பொழிவு இருக்கக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. வழக்கமாக நவம்பர் மாதத்தில் இந்தியாவில் குளிர்ந்த சூழலே காணப்படும். ஆனால், இந்த ஆண்டு நவம்பர் மாதத்தை பொறுத்தவரை பொதுவாக வெப்பம் அதிகமான மாதமாக இருக்கும் என்பது இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பு.
பூமத்திய ரேகை பசிபிக் கடலில் எல்நினோ எனப்படும் காலநிலை தாக்கம் இருக்கிறது. எல்நினோ என்பது தென் அமெரிக்காவை ஒட்டிய பசிபிக் கடல் பகுதியில் கடல்நீரின் வெப்பத்தை அதிகரிக்கும் காலநிலை. இதனால் பருவகால காற்று பலவீனமடைந்து, இந்தியாவில் வறண்ட வானிலை ஏற்படஇதுவே காரணமாகிறது.
மேலும் POSITIVE INDIAN OCEAN DIPOLE என்ற இந்திய பெருங்கடலின் மீது நேர்மறை காற்றலைவு நிலவுகிறது. POSITIVE INDIAN OCEAN DIPOLE என்பது இந்திய பெருங்கடலின் மேற்குப்பகுதிகளுக்கும், கிழக்குப்பகுதிகளுக்கும் இடையே உள்ள வெப்ப வேறுபாடு ஆகும். இதுபோன்ற தாக்கங்களால் இந்தியாவின் பல பகுதிகளில் வடமேற்கு மற்றும் மத்திய மேற்கு பகுதிகளை தவிர்த்து, பிறபகுதிகளில் வழக்கத்தைவிட குறைந்த வெப்பநிலை பதிவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய வானிலை ஆய்வு மைய பொது இயக்குநர் மிருத்யுஞ்சய் மொஹபத்ரா, 1901 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆறாவது முறையாக இந்த அக்டோபர் மாதத்தில்தான் நாட்டின் தென்பகுதிகளில் மிகவும் குறைவான மழை பதிவாகி உள்ளதாக தெரிவித்தார். நவம்பர் மாதத்தில் நாட்டின் தென்பகுதிகளில் சில இடங்களில் மட்டும் வழக்கத்தைவிட கூடுதலான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பைவிட குறைவான அளவு மழை பதிவாகும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அடுத்த பருவகாலம் வரை எல்நினோ தாக்கம் நீடிக்கக் கூடும் என்பதும் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பாக இருக்கிறது.
இதையும் படிக்க: பாகிஸ்தான்: வெடிகுண்டு தாக்குதலில் 5 பேர் உயிரிழப்பு.. 21 பேர் காயம்!