வாணியம்பாடி அருகே 4 பேரை தாக்கிய சிறுத்தையை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வேலூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த சிக்கனாங்குப்பம் கிராமத்தில் வழக்கம் போல் விவசாயிகள் பணிகளில் ஈடுபட்டிந்தனர். அப்போது சிறுத்தை ஒன்று ஊருக்குள் நுழைந்தது பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. யாரும் எதிர்பாராத நேரத்தில் விவசாய நிலத்தில் வேலை செய்துகொண்டிருந்த பாரதி என்பவரை சிறுத்தை தாக்கியது. அத்துடன் அவரைக் காப்பாற்ற சென்ற அலுமேலு அம்மாள் என்பவரையும் சிறுத்தை தாக்கியது.
இதனால் அங்கு பதட்டமான சூழல் ஏற்பட, அருகில் உள்ள கரும்பு தோட்டத்தில் சிறுத்தை பதுங்கிக்கொண்டது. சிறுத்தை இருப்பதை அறிந்த மக்கள் அதனை பார்க்க அதிக அளவில் குவிந்தனர். அப்போது பதுங்கியிருந்த சிறுத்தை திடீரென வேகத்துடன் வெளியே வந்து, வேடிக்கைப் பார்த்த மக்களை விரட்டி சென்று கடுமையாக தாக்கியது. சிறுத்தை தாக்கியதில் வேடிக்கை பார்க்கச் சென்ற சந்தோஷ் மற்றும் கமல் ஆகியோர் காயமடைந்தனர். ஆந்திராவின் வீரணமலை பகுதியில் இருந்து வழிதவறி இந்தச் சிறுத்தை ஊருக்குள் வந்திருக்கலாம் என்று மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் சிறுத்தை தாக்கியதில் காயமடைந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மக்களை அச்சுறுத்தி கிராமத்திற்குள் பதுங்கியுள்ள அந்தச் சிறுத்தையைப் பிடிக்க 20 வன ஊழியர்கள் களமிறக்கப்பட்டுள்ளதாக வன அலுவலர் புதிய தலைமுறைக்கு தெரிவித்துள்ளார். சிறுத்தையின் தாக்குதலால் அந்தக் கிராமமே பரப்பரப்புடன் காணப்படுகிறது.