பிடிக்கும் மீனுக்கு ஒன்றிய அரசு கட்டணம் வசூலிப்பது எங்கும் நடந்திராத பெருங்கொடுமை: சீமான்

பிடிக்கும் மீனுக்கு ஒன்றிய அரசு கட்டணம் வசூலிப்பது எங்கும் நடந்திராத பெருங்கொடுமை: சீமான்
பிடிக்கும் மீனுக்கு ஒன்றிய அரசு கட்டணம் வசூலிப்பது எங்கும் நடந்திராத பெருங்கொடுமை: சீமான்
Published on

”உலக நாடுகளெல்லாம் மானியங்கள் கொடுத்து ஊக்குவிக்கும்போது இந்திய அரசு மீன்பிடித்தொழிலுக்கும், பிடிக்கும் மீனுக்கும் கட்டணம் நிர்ணயிப்பது எங்கும் நடந்திராத பெருங்கொடுமை” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாஜக அரசின்  கொடுங்கோன்மை நடவடிக்கைகளின் நீட்சியாகக் கொண்டு வரப்பட்டிருக்கும் மற்றொரு மக்கள் விரோதத் திட்டம்தான் தற்போதைய நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படவிருக்கும் புதிய மீன்பிடி சட்டவரைவாகும். இப்புதிய சட்டவரைவின்படி, மீனவர்கள் குறிப்பிட்ட கடல் மைல் தொலைவுக்குள்தான் மீன்பிடிக்க வேண்டும் என விதி வகுக்கப்பட்டிருக்கிறது.

மேலும், இச்சட்ட வரைவின்படி, குறிப்பிட்ட எல்லைக்குள் வரையறுக்கப்பட்ட நேரத்திற்குள்தான் மீன்பிடிக்க வேண்டுமெனவும், அதிலும் குறிப்பிட்ட ரூபாய் மதிப்புக்கு மேலாக மீன்களைப் பிடிக்கக்கூடாது எனவும் இச்சட்டவரைவுக் கட்டுப்பாட்டை விதிக்கிறது. இதனை மீறுவோருக்கு 5 இலட்ச ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்; விதிமீறலில் ஈடுபடும் மீனவர்களின் படகுகள், வலைகளைப் பறிமுதல் செய்வதுடன் ஓராண்டு சிறைத் தண்டனை, மீன்பிடித்தொழிலில் ஈடுபட வாழ்நாள் தடை உள்ளிட்ட கடும் விதிமுறைகளை இச்சட்டவரைவு உருவாக்கியுள்ளது. இந்த அபராதத்தொகையினை, தனியார் பெருநிறுவனங்கள் மட்டுமே செலுத்த முடியும். இதனால், பாரம்பரியமாக மீன்பிடித்து வரும் மீனவர்கள் மீன்பிடி தொழிலைவிட்டே போக வேண்டிய துயரநிலை ஏற்படக்கூடும். இதிலிருந்தே இச்சட்டம் யாருக்காக இயற்றப்படுகிறது என்பதை எளிதாக விளங்கிக் கொள்ளமுடியும்.

மீன்பிடித்தொழிலுக்கு உலக நாடுகளெல்லாம் மானியங்கள் கொடுத்து ஊக்குவிக்கும்போது இந்திய அரசு மீன்பிடித்தொழிலுக்கும், பிடிக்கும் மீனுக்கும் கட்டணம் நிர்ணயிப்பது எங்கும் நடந்திராத பெருங்கொடுமையாகும். ஆண்டுக்கு 60,000 கோடி அந்நியச்செலாவணியை ஈட்டித் தந்து, 80% புரத உணவான மீனை நாட்டு மக்களின் உணவுத்தேவைக்காக அளிக்கும் மீனவர்களுக்கு எரிபொருள் மானியம் வழங்கப்படாதபோது, ஆழ்கடலில் மீன்பிடித்து அங்கேயே பதப்படுத்தி, பத்திரப்படுத்தி வெளிநாடுகளுக்குச் சந்தைப்படுத்தும் பெருங்கப்பல்களுக்கு மட்டும் வரியில்லா எரிபொருள் வழங்கப்படுவது ஏன்?

கடல்சீற்றத்தாலும், புயல், மழை போன்றவை காரணமாகவும் நடுக்கடலில் சிக்கிக்கொண்ட மீனவர்களை மீட்க எவ்வித நவீன திட்டங்களையும் முன்வைக்காத மோடி அரசு, மீனவர்களுக்கான மீன்பிடித் தடைக்காலம் நிர்ணயிக்கும் அதிகாரத்தை மாநில அரசிடமிருந்து பறிப்பதும், அவ்வாறு தடைவிதிப்பட்ட காலங்களில் எவ்விதத் துயர்துடைப்புத் தொகையும் அறிவிக்கப்படாததும் இப்புதிய வரைவு மிகப்பெரிய ஏமாற்று என்பதற்கான தக்கச் சான்றாகும்.

மீன்பிடிப்பதற்குக் கட்டணம், படகுக்குக் கட்டாய உரிமம், மீன்பிடிப்பதற்கு நேரக்கட்டுப்பாடு, குறிப்பிட்ட மீன் வகைகளைப் பிடிக்கத் தடை, குறிப்பிட்ட அளவிற்குமேல் மீன்பிடிக்கத் தடை, வலை மற்றும் படகின் அளவிற்குக் கட்டுப்பாடு, அவற்றை முறைப்படுத்த அதிகாரிகளை நியமிப்பது, கண்காணிப்பு அமைப்பினை உருவாக்குவது என இச்சட்டவரைவின் விதிகள் முழுவதும் மீனவ மக்களை அச்சுறுத்தக்கூடிய தண்டம், கைது, பறிமுதல், தண்டனை என்ற சொல்லாடல்கள்தான் அதிகம் இடம்பெற்றுள்ளது. இதன்மூலம், மீனவர்களை மீன்பிடித்தொழிலிருந்து அப்புறப்படுத்தி அதனைப் பன்னாட்டுப் பெருமுதலாளிகளுக்குத் தாரைவார்க்கச் சட்டத்தின் வழியே செய்யப்படும் சதிச்செயல் இதுவென்பது எவ்வித ஐயங்களுக்கும் இடமின்றித் தெளிவாகப் புலனாகிறது.

இத்தகைய கடுமையான மீன்பிடி விதிமுறைக் கொள்கைகளை உருவாக்கும்போது மீனவ மக்களிடமும், மாநில அரசுகளிடமும் கருத்துக்கேட்காமல் ஒன்றிய அரசு தன்னிச்சையாக முடிவெடுத்து அறிவிப்பது மண்ணின் மக்களின் நலனைப் புறந்தள்ளுவது அவர்களின் உணர்வுகளை உரசிப்பார்க்கும் கொடுஞ்செயலாகும். 

ஆகவே, மீனவர்களின் வாழ்வாதாரத்தைச் சீரழித்து, மீன்பிடித் தொழிலைவிட்டே மீனவர்களை அப்புறப்படுத்தி, பன்னாட்டு நிறுவனங்களுக்கு மீன்பிடித்தொழிலைத் தாரைவார்த்து நாட்டின் பூர்வக்குடி மீனவர்களைக் கொத்தடிமைகளாக மாற்றும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய மீன்பிடி சட்ட வரைவு-2021ஐ உடனடியாகத் திரும்பப்பெற வேண்டுமென வலியுறுத்துகிறேன். மக்களின் எதிர்ப்புணர்வையும் மீறி, இப்புதிய சட்டவரைவைச் செயல்படுத்த ஒன்றிய அரசு முனைந்தால், அதனை எதிர்த்து மாபெரும் மக்கள்திரள் போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முன்னெடுக்குமென எச்சரிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com