மாநிலங்களுக்கு வழங்கப்பட வேண்டிய வரியை மத்திய அரசு பகிர்ந்தளித்துள்ள நிலையில், தமிழ்நாட்டிற்கு 7,268 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அக்டோபர் மாதத்திற்கு மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய வரிப்பகிர்வு தொகையான 1,78,173 கோடி ரூபாயை விடுவித்துள்ளதாக மத்திய நிதியமைச்சகம் கூறியுள்ளது.
விழாக்காலங்கள் தொடங்கியுள்ள நிலையில், மாநிலங்களின் மூலதன செலவினங்களை ஊக்குவிக்க தேவையான கூடுதல் நிதிக்காக ஒரு தவணை தொகையான 89,086 கோடி ரூபாயை முன்கூட்டியே சேர்த்து வழங்கியிருப்பதாகவும் மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதிகபட்சமாக, உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு வரிப்பகிர்வாக 31,962 கோடி ரூபாயும், பீகார் மாநிலத்திற்கு 17,921 கோடி ரூபாயும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்ததாக, மத்தியப் பிரதேச மாநிலத்திற்கு 13,987 கோடி ரூபாயும், மேற்குவங்க மாநிலத்திற்கு 13,404 கோடி ரூபாயும், மகாராஷ்டிர மாநிலத்திற்கு 11,255 கோடி ரூபாயும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டிற்கு 7,268 கோடி ரூபாயும், ஆந்திராவிற்கு 7,211 கோடி ரூபாயும், கர்நாடகாவிற்கு 6,498 கோடி ரூபாயும் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. குறைந்த அளவாக, மிசோரமிற்கு 891 கோடி ரூபாயும், சிக்கிமிற்கு 691 கோடி ரூபாயும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.