டெல்டா மாவட்டங்களில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தென்னை மரங்களை ஆய்வு செய்ய மத்திய அரசு அதிகாரிகள் தமிழகம் வந்துள்ளனர்.
கடந்த 16-ஆம் தேதி ஏற்பட்ட கஜா புயல் காரணமாக யாரும் நினைத்துப் பார்க்காத அளவுக்கு வரலாறு காணாத பேரழிவை டெல்டா மாவட்ட மக்கள் சந்தித்திருக்கிறார்கள். தமிழ்நாட்டின் எட்டு மாவட்டங்களில் ஊடுருவிய கஜா புயல், நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய நான்கு மாவட்டங்களில் உயிர்ச்சேதங்களையும், பொருட்சேதங்களையும், உறவாக வளர்த்து வந்த ஆடு, மாடுகளையும் சூறையாடி சென்றுள்ளது.
இதில் அதிகம் பாதிக்கப்பட்டது தென்னை விவசாயிகள்தான். ஆறா வடுவாக மாறிய கஜா புயலினால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் டெல்டா மக்களுக்கு பல்வேறு தரப்பினரும் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். பல்வேறு அரசியல் கட்சிகளும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதி அளித்து வருகின்றனர்.
இதனிடையே காஜ புயல் நிவாரண நிதியாக ரூ.15 ஆயிரம் கோடி வழங்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் மோடியை சந்தித்து வலியுறுத்தினார். பாதிப்புகள் குறித்து அறிய மத்தியக் குழு ஒன்றையும் ஆய்வுக்காக அனுப்புமாறு கேட்டுக்கொண்டார். அதனையடுத்து தமிழகம் வந்த மத்தியக் குழு 3 நாட்கள் ஆய்வு மேற்கொண்டு சென்றுள்ளது.
இதையடுத்து கஜா புயல் பாதிப்புக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.353.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார். மத்தியக் குழுவின் இறுதி அறிக்கைக்கு பிறகு நிவாரண நிதி கூடுதலாக ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், டெல்டா மாவட்டங்களில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தென்னை மரங்களை ஆய்வு செய்ய மத்திய அரசு அதிகாரிகள் தமிழகம் வந்துள்ளனர். தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்றும், நாளையும் தென்னை வளர்ச்சி வாரிய தலைவர் உட்பட 3 பேர் ஆய்வு செய்ய உள்ளனர்.