அடுத்த 2 நாள்களில் மத்திய குழு 11 மாவட்டங்களில் ஆய்வு: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். பேட்டி

அடுத்த 2 நாள்களில் மத்திய குழு 11 மாவட்டங்களில் ஆய்வு: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். பேட்டி
அடுத்த 2 நாள்களில் மத்திய குழு 11 மாவட்டங்களில் ஆய்வு: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். பேட்டி
Published on

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களை தற்காலிகமாக சீரமைக்க ரூ. 549.63 கோடியும், நிரந்தரமாக சீரமைக்க ரூ.2079.86 கோடியும். ஆக மொத்தம் ரூ.2629.29 கோடி தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யக் கோரி, மத்திய அரசுக்கு கடந்த 17 ம்தேதி அன்று தமிழக முதல்வா் ‌மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதத்தை டெல்லி சென்ற திமுக மக்களவை உறுப்பினர் டி.ஆர்.பாலு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்து அளித்தார்.

இந்தநிலையில் சென்னை எழிலகத்தில் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் இன்று நிருபர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது :-

“தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக ஏற்பட்ட சேதங்களை பார்வையிட மத்திய அரசின் 6 பேர் கொண்ட குழு, முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோளுக்கிணங்க, நாளை மதியம் வருகிறது. மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் இணைச் செயலர் ராஜீவ் ஷர்மா தலைமையில், மொத்தம் 6 அலுவலர்கள் கொண்ட ஒன்றிய பல்துறை ஆய்வுக் குழு, தமிழ்நாட்டில் கனமழையின் காரணமாக ஏற்பட்ட சேதங்களை பார்வையிட உள்ளது.

இந்தக் குழுவானது. 21.11.2021 அன்று சென்னை வந்தடைந்து, தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலருடன் கலந்தாலோசிக்கிறது. பின்னர், இந்தக் குழு இரண்டு குழுக்களாக பிரிந்து, 22.11.2021 மற்றும் 23.11.2021 ஆகிய நாட்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ள உள்ளது.

குழு 1 உறுப்பினர்கள் ராஜீவ் ஷர்மா, விஜய் ராஜ்மோகன், ரனன்ஜெய் சிங் ஆகியோர் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் ஆய்வு செய்கிறார்கள். இந்த குழுவை, வருவாய் நிர்வாக ஆணையர் பணிந்திர ரெட்டி ஒருங்கிணைப்பார்.

குழு 2 உறுப்பினர்கள் ஆர்.பி.கவுல், ஆர்.தங்கமணி,பாவ்யா பாண்டே ஆகியோர் கன்னியாகுமரி, வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் ஆய்வு செய்கிறார்கள். இந்த குழுவை பேரிடர் மேலாண்மை துறை அரசு முதன்மைச் செயலாளர் குமார் ஜெயந்த் ஒருங்கிணைப்பார். மேலும், மழை பாதிப்புகள் குறித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர் குறிப்பு எடுப்பார்கள்.

ஆய்வு முடிந்தவுடன் நவ.24 ம் தேதியன்று மத்திய குழுவினர், முதல்வர் ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை செய்கிறார்கள்.

மத்திய அரசின் ஆய்வுக்கு பின்னர் தொடர்புடைய குழு அலுவலர்களிடம் கலந்து ஆலோசித்து தமிழகத்தில் ஏற்பட்ட மழை சேத பாதிப்புகள் குறித்து மத்திய அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கும். ஒன்றிய குழு வருகிறபோது, கட்சி வேறுபாடின்றி அனைத்து கட்சியினரும், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு மழைப்பாதிப்பு குறித்து தெரிவிக்கவேண்டும். தமிழகத்தில் விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்னும் மழை பெய்து கொண்டு இருக்கிறது. மத்திய அரசிடம் நிவாரணம் பெற எவ்வளவு அழுத்தங்களைக் கொடுக்க முடியுமோ அவ்வளவு அழுத்தம் கொடுத்து தற்போது புதியதாக இருக்கும் வெள்ளச் சேத விவரங்களையும் சேர்த்து நாடாளுமன்ற உறுப்பினர் மூலமாக முடிந்த அளவுக்கு அதிக நிவாரணம் பெற நடவடிக்கை எடுப்போம்.

அதிகமாக எந்த இடங்களில் பாதிப்பு இருக்கிறது என்று பார்த்து அங்கு மத்திய குழு ஆய்வு மேற்கொள்வார்கள். கனமழை காரணமாக மாணவர்கள் பள்ளி சான்றிதழ், வீட்டின் பத்திரங்கள் சேதமடைந்துள்ளது. விரைவில், அதனை புதுப்பித்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

முருகேசன்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com