சென்னை புழல் சிறையில் கைதிகளிடம் இருந்து 5 செல்போன்கள், 5 சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
சிறைகளில் செல்போன்கள் பயனபடுத்தப்படுகிறது என்று வந்த புகாரையடுத்து உடனடியாக தமிழக சிறைகளில் சோதனை நடைபெறும் என சிறைத்துறை ஏடிஜிபி சைலேந்திர பாபு, தெரிவித்திருந்தார். இதையடுத்து அனைத்து சிறைகளிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், புழல் மத்திய சிறையில் சிறைத்துறை கண்காணிப்பாளர் ஜெயராமன் தலைமையில், சிறை கண்காணிப்பு குழுவினர் விசாரணை கைதிகளிடம் சோதனை நடத்தினர். அப்போது, பாஸ்கர், சிவா, உள்ளிட்ட 4 கைதிகளிடமிருந்து 5 செல்போன்கள், 5 சிம்கார்டுகள் ஆகியவற்றை சிறை கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக சிறைத்துறை அதிகாரிகள், “தமிழக சிறையில் கைதிகளிடம் தொடர் சோதனை நடத்தப்படும். செல்போன்கள், சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்தப்படும்” என்று கூறியுள்ளனர்.