மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல விதிக்கப்பட்ட தடை இன்று முதல் அமலுக்கு வந்தது. அதன்படி கோயிலுக்கு வரும் எந்தப் பக்தர்களும் உள்ளே செல்போனை எடுத்துச் செல்ல முடியாது. செல்போன் வைப்பதற்கென தனியாக இடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் ரூ.10 கட்டணம் செலுத்தி தங்களது செல்போனை ஒப்படைக்கலாம்.
முன்னதாக, மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் கடந்த பிப்ரவரி 2-ந் தேதி இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 36 கடைகள் எரிந்து சாம்பலாயின. கலைநயம் மிக்க ஆயிரங்கால் மண்டபம் அருகே உள்ள வீரவசந்தராயர் மண்டபம் தீப்பிடித்ததில் இடிந்து விழுந்தது.
இதனிடையே, மீனாட்சி அம்மன் கோயிலில் ஏற்பட்ட தீ விபத்திற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படாததே காரணம் என்றும், எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மதுரையை சேர்ந்த முத்துக்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அரசு அதிகாரிகள், பாதுகாவலர்கள் தவிர மற்றவர்கள் யாரும் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் செல்போன்களை கொண்டு செல்லத் தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு மத்தியப் படை பாதுகாப்பை தமிழக அரசு கோர வேண்டும் என வலியுறுத்திய நீதிமன்றம், தேவைப்பட்டால் கோயிலின் மின் இணைப்பையும் மாற்றியமைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மீனாட்சி அம்மன் கோயிலின் ஸ்திரத்தன்மை குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என அறிவுறுத்திய நீதிமன்றம், கோயிலுக்குள் தீத் தடுப்பு கருவிகள் எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. அதன்படி தற்போது செல்போன் கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.